தமிழ்நாட்டில் திருப்பூருக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் விரும்பி வருவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கூலி வேலைக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் வருகிறார்கள். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் விரும்பி வரும் ஊர் என்றால் அது திருப்பூர்தான். கோவையிலோ, சென்னையிலோ ஒரு வடமாநிலத் தொழிலாளி எளிதாக வந்து அறை எடுத்துத் தங்கிச் செட்டில் ஆகிவிட முடியாது. ஆனால் திருப்பூர் அப்படி அல்ல... இன்று வேலை தேடிச் சென்றாலும் வேலையும் விடுதி வசதியும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, உழைப்பை மட்டுமே நம்பி வரும் எவரும் திருப்பூரில் உழைத்தால் முதலாளி ஆகிவிட முடியும்.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு வரும் வடமாநிலத்தவரை விடத் திருப்பூருக்கு வருபவர்களே அதிகம். திருப்பூருக்கு ஒரு காலத்தில் தேனியில் இருந்தும், மதுரையில் இருந்தும் அதிக அளவில் மக்கள் பிழைப்புத் தேடிச் சென்றார்கள். அவர்கள்தான் பல பகுதிகளில் வேலை செய்தார்கள். அதற்குப் பின்னர் படிப்படியாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி எனப் பல்வேறு மாவட்ட மக்களும் பிழைப்புத் தேடி வரத் தொடங்கினர். அதேபோல ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் என ஒட்டுமொத்தத் தென்மாவட்ட மக்களும் பிழைப்புத் தேடி வரும் நகரமாகத் திருப்பூர் மாறியது.

Why do workers from North Indian states prefer coming specifically to Tiruppur in Tamil Nadu

அன்று ஊரில் வருமானம் இல்லாமல், உடல் உழைப்பை மட்டுமே நம்பிச் சென்ற லட்சக்கணக்கான மக்கள், இன்று திருப்பூரிலேயே செட்டில் ஆகி இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது அவர்கள் பல இடங்களில் சொந்தமாகத் தொழில் நிறுவனங்களை நடத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

இப்போதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் பிழைப்புத் தேடித் திருப்பூர் வருகிறார்கள் என்றாலும், முன்பைப் போல அதிக அளவில் இல்லை; மிகக் குறைவாகவே வருகிறார்கள். இதனால் திருப்பூரில் வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமானது. அதன் காரணமாக வடமாநிலங்களில் இருந்து பலரும் வரத் தொடங்கினார்கள். அப்படி வந்தவர்கள் நல்ல சம்பளம் பெறத் தொடங்கியதும், அவர்களைப் பார்த்து லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பிழைப்புத் தேடித் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

போதிய கல்வியறிவு இல்லாமல், அறியாமையில் வாழும் பல மக்கள் எளிதாக அறை எடுத்துத் தங்கி, வேலைக்குச் சேரக்கூடிய சூழல் தமிழ்நாட்டிலேயே திருப்பூரில் மட்டும்தான் இருக்கிறது. இத்தனைக்கும் பக்கத்தில் உள்ள கோவையில் அப்படி உடனடியாக வேலைக்குச் சேர்ந்துவிட முடியாது. கோவையில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருக்க வேண்டும்; அவரும் அறை எடுத்துத் தங்கியிருக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் இருந்தாலும், உங்களுக்குத் தொழில்நுட்ப அறிவோ அல்லது படிப்பறிவோ ஓரளவாவது இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கோவையில் வேலையிலேயே சேர்ந்துவிட முடியாது. கோவையில் அவ்வளவு எளிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கவும் மாட்டார்கள்.

கோவையில் இப்படி என்றால், சென்னையில் நிலைமை முற்றிலும் வேறானது... சென்னையில் அறிவு மற்றும் உயர்கல்விதான் வேலைக்குச் சேர முக்கியமான ஆயுதம். அவை இல்லாமல் இங்கு யாராலும் வேலைக்குச் சேரவோ அல்லது அறை எடுத்துத் தங்கவோ முடியாது. சென்னையில் வடமாநிலத்தவர் அதிகம் தேவை என்றாலும், ஹோட்டல் மற்றும் கட்டிட வேலை போன்ற அடிப்படை வேலைகளுக்கே அவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்றாலும், முன்பின் தெரியாதவர்களை வேலைக்குச் சேர்க்க இங்கு எல்லாருமே தயங்குகிறார்கள். ஏற்கனவே அங்கு வேலை செய்யும் வடமாநிலத்தவரின் தொடர்பு இருந்தால் மட்டுமே வேலைக்குச் சேர முடியும். அத்துடன் அவர்களின் பின்புலத்தையும் மிகவும் ஆராய்வார்கள். உடல் உழைப்புத் தொழிலுக்கே சென்னையில் இதுதான் நிலைமை!

ஆனால் திருப்பூர் அப்படி இல்லை... வேலை செய்யத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை; ஒவ்வொரு பகுதியிலும் 'வேலைக்கு ஆட்கள் தேவை' என்ற அறிவிப்புப் பலகை கண்டிப்பாக இருக்கும். உடல் உழைப்பு மட்டுமே தர முடியும் என்றால், நாளைக்கே வேலைக்குச் சேர்ந்துவிட முடியும்; தங்குவதற்கு அறையும் எளிதாகக் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சம்பளம் கிடைக்கும்; ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைக்கும். புதிய வாழ்வியல் சூழலைப் பழகி, தொழிலைக் கற்றுக்கொண்டால், சில களத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து தனியாக நிறுவனமே எடுத்து நடத்த முடியும்; சில ஆண்டுகளில் முதலாளியும் ஆகிவிட முடியும். மொத்தத்தில் திருப்பூருக்கு யார் வந்தாலும் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் கோவை, சென்னை போன்ற நகரங்களில் எல்லாம் வாழ்வதற்கே ஒரு தகுதி வேண்டும் என்கிற நிலைதான் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+