இது புதுசா இருக்குண்ணே.. உதயநிதி ஏன் சினிமாவில் நடிக்கிறார் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி சொன்ன காரணம்
திருப்பூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பது மற்றும் திரைப்படங்களை தயாரிப்பதை கையில் எடுத்து பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் விமர்சித்து வரும் நிலையில், அவர் சினிமாவில் நடிப்பதற்கான புதிய காரணத்தை தெரிவித்து இருக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குண்டடத்தில், பிற கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றனர். இதில் திமுக, அமமுக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

கார்ப்பரேட் கம்பெனி திமுக
இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனிபோல் செயல்படுகிறது. மாற்று கட்சியிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே முக்கிய மந்திரி பதவிகள் கொடுத்து உள்ளார்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்களாகியும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

உதயநிதி சினிமாவில் நடிப்பது ஏன்?
ஆட்சியில் சம்பாதித்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே உதயநிதி திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கமிஷன் பெறும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. திரைத்துறையில் திமுகவின் ஆதிக்கத்தின் காரணமாக 150 க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை அதிமுக கொண்டு வந்த காரணத்திற்காக அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வெல்வோம்
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக தற்போது செயல்படுத்தி வருகிறது. மாண்டஸ் புயலால் பாதிப்பு இல்லை. ஆனால் இதில் சிறப்பாக செயல்பட்டதாக திமுக அரசு பொய் சொல்லி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வெல்வோம்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications