ரீலில் வந்ததை ரியல் ஆக்கிய பலே திருடன்.. திருப்பூரில் பைக் விற்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருப்பூர்: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளோடு வாலிபர் ஒருவர் எஸ்கேப் ஆகியுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
யாரையும் நம்பாதே.. யாராக இருந்தாலும் தீர விசாரித்து செயல்படு என்பதற்கு இணங்க, நகைச்சுவை நடிகர் வடிவேலு பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். பொதுவாக நடிகர் விவேக் தான் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு காட்சிகளை காமெடியாக மக்களிடையே சேர்த்துள்ளார்.

வடிவேலு பட பாணியில்
எனினும் வடிவேலும் சைலண்டாக இது போன்ற பல எச்சரிக்கை காட்சிகளை காமெடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருப்பார். அப்படித்தான், பைக் திருடர்கள் அதிகம் இருக்கும் காலத்தில், யாரையும் நம்பி பைக்கை கொடுக்க என்பதனை மக்களுக்கு புரிய வைக்க ஒரு காமெடி காட்சியில் நடித்து இருப்பார். இந்த காமெடி காட்சியில் மக்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆனது.
ஜனனம் திரைப்படத்தில் ஒரு ஸ்கூட்டியை 18 ஆயிரத்துக்கு விற்க முயற்சிக்கும் போது இடையில் வந்து பேரம் பேசும் வடிவேலு, வண்டியில் எல்லா பார்ட்டையும் பசை போட்டு ஒட்டி வைத்துவிட்டு 18 ஆயிரம் கேக்குறீங்களா.. வண்டிய ஓட்டி பார்த்து தான் வாங்குவோம் என்று கூறி யார் என்றே தெரியாத 2 பேரையும் ஓட்டி பார்க்க கூறி ஸ்கூட்டியை கொடுத்துவிடுவார். பிறகு நீண்ட நேரம் ஆகிய பிறகும் ஓட்டி பார்ப்பதாக கூறி சென்றவர்கள் திரும்பி வராததால் அவர்கள் பைக்கோடு எஸ்கேப் ஆனது தெரியவரும்.
இதையடுத்து வடிவேலுக்கு தர்ம அடி கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். தற்போது இதே பாணியில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கோவில்வழி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான குமரேசன் இருசக்கர வாகனத்தை விற்பதாக கூறி விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சேலத்தை சேர்ந்த பலே திருடனான சிவா என்ற 27 வயது வாலிபர் தான் உங்கள் பைக்கை வாங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து திருப்பூர் காங்கேயம் பஸ் நிலையம் வரும்படி கூறியிருக்கிறார். அதன்பேரில் அங்கு வந்த சிவா பைக்கை சுற்றி சுற்றி பார்த்தார். பின்னர் அவர் பைக்கை ஓட்டி பார்த்தால் தான் வாங்குவேன் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பலே திருடன் சிவா என்பது தெரியாத குமரேசன் அவரை நம்பி பைக்கை கொடுத்து இருக்கிறார். அதுக்கு அப்பறம் என்ன நடந்திருக்கும் என்று எல்லாருக்குமே புரியும்.. ஆம் அப்படி சென்றவர் திரும்பி வரவே இல்லையாம்.
இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேசன் இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் சேலத்தில் பதுங்கியிருந்த சிவாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications