மணப்பாறை அருகே இளைஞரிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.! அல்லேக்காக தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொறியியல் பட்டதாரி இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.
மணப்பாறை அருகே உள்ள கண்ணூத்து கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். பொறியியல் படித்து முடித்து இவர் சொந்தமாக ஜே.சி.பி. இயந்திரம் வாங்கி வாடைக்கு விட்டு தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் விராலிமலையை சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு மாத வாடகைக்கு தனது ஜேசிபி இயந்திர வாகனத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார்.

வண்டியை வாடகைக்கு எடுத்த ரங்கசாமியோ நல்ல பிள்ளையை போல் சில மாதங்கள் மட்டும் வாடகையை கொடுத்துவிட்டு வாகன உரிமையாளரான பார்த்திபனுக்கு தெரியாமலேயே வண்டியை விற்றுவிட்டார். இதனால் அதிர்ந்து போன பார்த்திபன் தன்னிடம் மோசடி செய்த ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து பார்த்திபனின் ஜே.சி.பி. இயந்திரத்தை மீட்டு அதனை மணப்பாறை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அங்கிருந்து தனது வாகனத்தை மீட்பதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்ததால், தனது ஜே.சி.பி.யை விரைந்து தன்னிடம் ஒப்படைக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 5 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு ஜேசிபியை மீட்டுச் செல்லலாம் என உத்தரவிட்டது. அதன் பேரில் சொத்து மதிப்புச் சான்றிதழ் கோரி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவை விசாரித்து பரிந்துரை செய்யுமாறு கண்ணூத்து வி.ஏ.ஓ.வுக்கு தாசில்தார் அலுவலகம் ஃபார்வாட் செய்திருக்கிறது.
சொந்தமாக தொழில் செய்வதற்காக வாங்கிய வண்டியை மீட்க இப்படி போராட வேண்டியுள்ளதே என மனம் வெம்பிப் போயிருந்த பார்த்திபனிடம், கொஞ்சம் கூட கூசாமல் ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் சொத்து மதிப்புச் சான்றிதழுக்கு உடனே பரிந்துரை செய்வதாக கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனால் கொதித்துப் போன பார்த்திபன் இது குறித்த தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு சொல்லி அவர்கள் கொடுத்த யோசனைப்படி நடந்துகொண்டார்.
இதையடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மணப்பாறை வட்டாரத்தில் உள்ள ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications