ஆதவ் அர்ஜுனா ரொம்ப மோசம்.. நாங்களும் அமைச்சரா இருந்தோம்.. இப்படி இல்லப்பா.. நயினார் நாகேந்திரன்
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியல் பரபரப்பு ஓயவில்லை. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெகவை விமர்சிக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா அயனாவரம் காவல் நிலையத்தை ஆய்வு செய்தது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆய்வு செய்கிறார். இதுவரைக்கும் எந்த அமைச்சரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் போனது இல்லை. ஆதவ் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். அங்கு ஒரு பெண் காவலரை கூப்பிட்டு, எத்தனை எப்ஐஆர் ஆகியுள்ளது என கேட்கிறார். கான்ஸ்டபிளை கூப்பிடுகிறார். அவர் அந்த சேரில் உட்கார்ந்து இவருக்கு சல்யூட் அடிக்கிறார்.

எந்த அமைச்சரும் இப்படியில்லை
நாங்களும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் இருந்துள்ளோம். பல அரசியல் தலைவர்களை பார்த்துள்ளோம். யாரும் காவல் நிலையம் சென்று எப்ஐஆர் விபரங்களை எல்லாம் ஆய்வு செய்ததில்லை. ஆதவ் அர்ஜுனா கேட்கும் கேள்விக்கு எல்லாம் பெண் காவலர் பதில் சொல்லி கொண்டிருக்கிறார். செல்போனில் என்னவோ எடுத்து காட்டினார். இதெல்லாம் என்ன நடைமுறை. பத்திரிகை, ஊடகங்களில் இது எல்லாம் காட்டவே இல்லை. அவர்கள் தான் ரீல்ஸ் போடுகிறார்கள் என்றால் பத்திரிகைகள் இதை கேட்பதில்லை.
ஒரு அமைச்சர் இரவு நேரத்தில், எஸ்பியை வீட்டிற்கு வா என்று கூப்பிட்டுள்ளார். இது எல்லாம் எதுக்கு என்று தெரியவில்லை. நள்ளிரவில் என்ன விசாரணை நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு கேவலமான முறையில் ஆட்சி நடக்கிறது. தீபாவளி அன்றைக்கு மட்டுமே தமிழகத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளது. அதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நியாயப்படுத்துகிறார்.
விஜய் வாய் திறப்பாரா
இவ்வளவு மோசமான செயல். செஞ்சியில் குழந்தை மாயமாகி இவ்வளவு நாட்களாகிவிட்டது. இன்னும் கண்டறிய முடியவில்லை. இதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் சொல்லுவாரா. கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 15 பேர் மாயமாகியுள்ளனர். அதில் 7 பேர் குழந்தைகள், பெண்கள். இதையெல்லாம் எங்கு போய் சொல்வது. பத்திரிகை, ஊடகங்களிலும் இதை வெளிப்படுத்துவதில்லை. நாங்கள் சொல்லும் கருத்துகளும் மக்களிடம் சரியாக சென்று சேர்வதில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
