திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு கோலாகலம்.. காவிரிக்கு படையலிட்டு புதுத்தாலி மாற்றி வழிபட்ட பெண்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் புது மணத்தம்பதிகள் புது தாலி மாற்றிக்கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர்.

நீரே உலகின் ஆதாரம் எனவேதான் 'நீர் இன்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே ஆடிப்பெருக்கு. ஆடி 18ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு.

காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவி செய்யும் தண்ணீருக்கு நன்றி சொல்லும் விதமாக படையலிட்டு காவிரி,வைகை, தாமிரபரணி அன்னையரை மக்கள் வழிபட்டனர்.

நீலகிரியில் இன்று ரெட் அலர்ட்.. தயார் நிலையில் மீட்புக்குழு.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!நீலகிரியில் இன்று ரெட் அலர்ட்.. தயார் நிலையில் மீட்புக்குழு.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடிப்பெருக்கு சிறப்பு

ஆடிப்பெருக்கு சிறப்பு

பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே. சந்திரன் என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம். புதன் கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம். சுக்கிரன் கொண்டாட்டங்களுக்குக் காரகர். ஆடிப்பெருக்கு நாளில் முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கிறது.

காவிரியின் சிறப்பு

காவிரியின் சிறப்பு

காவிரிக்கு தட்சிண கங்கை என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும் என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.

ஆடிப்பெருக்கு கோலாகலம்

ஆடிப்பெருக்கு கோலாகலம்

ஆடிப்பெருக்கு நாளில் புனித நீர் நிலைகளில் வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. திருச்சி,ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரிக்கரையோரங்களில் மக்கள் படையல் இட்டு காவிரி அன்னையை வணங்கினர்.

புதுத்தாலி மாற்றிய பெண்கள்

புதுத்தாலி மாற்றிய பெண்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் புதுமணதம்பதிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயது மூத்த பெண்கள் அனைவரும் அதிகாலையிலேயே முளைப்பாரி, பூஜை பொருட்கள் மற்றும் திருமணத்தின்போது அணிந்த மாலைகள் ஆகியவற்றுடன் ஆற்றுக்கு வந்தனர். காவிரியில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து முளைப்பாரி, மாலைகளை ஆற்றில் விட்டு விட்டனர். புதுத்தாலிகளை கட்டிக்கொண்டனர். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பல பகுதிகளில் குளிக்கவும் ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வழிபாடு

பக்தர்கள் வழிபாடு

தஞ்சை மாவட்டம், திருவையாறு புஷ்பமண்டப படித்துறை அதிகாலை முதலே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புனித நீராடிய பக்தர்கள் அனைவரும் ஐயாறப்பரை தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், தொட்டியம், முசிறி, முக்கொம்பு, ஜீயபுரம், திருப்பராய்த்துறை, கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை, மாயனூர், குளித்தலை, தஞ்சை மாவட்டம் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பல்லாயிரகணக்கான மக்கள் ஆடிப்பெருக்கு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். ஆற்றங்கரைக்கு போக முடியாதவர்கள் வீடுகளில் படையல் இட்டு வழிபட்டனர்.

துலாக்கட்ட காவிரியில் விழா

துலாக்கட்ட காவிரியில் விழா

காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு வழிபாடுகளில் முக்கியமானது சுமங்கலி பூஜை . துலாக்கட்ட காவிரி படித்துறையில் வாழை இலை விரித்து, அதில் விளக்கேற்றி, புது தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் பழங்கள் என மங்கல பொருட்கள் வைத்து காவிரி அன்னையை நினைத்து வழிபாடு செய்தார்கள். காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருள்களைக் காவிரித் தாய்க்கு சீர்வரிசையாக அளித்தனர்.

புதுத்தாலி கட்டிய பெண்கள்

புதுத்தாலி கட்டிய பெண்கள்

வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியின் கையால் புது தாலிக்கயிற்றைப் பெற்று அணிந்துகொண்டார்கள். திருமணம் ஆகாத ஆண்களின் கைகளிலும் பெண்களின் கழுத்துகளிலும் மஞ்கள் நூலைக் கட்டிவிட்டனர். பச்சரிசியுடன், சர்க்கரை, வெல்லம் கலந்து காவிரித் தாய்க்குப் படைத்த பிரசாதத்தைக் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

தமிழகம் முழுவதும் கோலாகலம்

தமிழகம் முழுவதும் கோலாகலம்

கடந்த ஆண்டு திருமணமான புது தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் கொண்டு வந்து காவிரியில் விட்டு வழிபட்டனர். காவிரித் தாய் கடலுடன் சங்கமிக்கும்போது இந்தத் திருமண மாலைகளும் அதனோடு சேர்ந்து செல்வதால் தம்பதியினர் வாழ்வில் சந்தோஷமாகச் சங்கமிப்பர் என்பது நம்பிக்கை. காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே ஆடிப்பெருக்கு களை கட்டியுள்ளது. மதுரை வைகை ஆற்றங்கரையிலும் தாமிரபரணி கரையோரங்களிலும், ராமேஸ்வரம், குற்றாலத்திலும் ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

English summary
Aadi perukku festival is celebrated on the 18th day of the Tamil calendar month of Aadi. This year Aadi perukku 2022 is on August 03, Wednesday. Aadi perukku or Aadi 18 is an auspicious festival to the Tamil community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X