அட வாரிசு அப்பாவாச்சே.. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விசயம்தானே! சரத்குமார் சப்போர்ட்
திருச்சி: நடிகர் விஜய், பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வது வரவேற்கத்தக்கது என்றும், அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான் எனவும் திருச்சியில் நடிகரிம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 9 ஆம் தேதி விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்த 'போர் தொழில்' என்ற திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் இந்த படத்தை விளம்பரப்படுத்த அந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி எல்.ஏ. சினிமாஸ் திரையரங்கிற்கு நேற்று மாலை 6.30 மணியளவில் 'போர் தொழில்' திரைப்பட நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஆகியோர் வருகை தந்தனர். இதனை யடுத்து படக்குழுவினர் படம் முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சரத்குமார், "இந்த படம் ஒரு குற்ற பின்னணியில் எடுக்கப்பட்ட திரில்லர் படமாகும். இந்த படத்தின் இயக்குனர் இந்த படத்தை சிறந்த முறையில் இயக்கி உள்ளார். படம் வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை நல்ல முறையில் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
திருச்சியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது. மேலும் எனது அடுத்த படம் 'அடங்காதே' திருச்சியை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டது. அந்த படமும் வெற்றியடையும். திரையரங்கில் 20 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து படம் வெளியாக உள்ளது. திரைப்படங்களை குறைந்தது 45 நாட்கள் இடைவெளியில் வெளியிட வேண்டும். இதன் மூலம் தியேட்டருக்கு பொதுமக்கள் வருவதை நாம் ஊக்குவிக்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் விஜய், பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இது வரவேற்கத்தக்கது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான்." என்று அவர் கூறினார். இந்த நிகழ்வில் சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications