முதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ.. திமுக எம்எல்ஏவை பாராட்டி அதிமுக போஸ்டர்.. மண்ணச்சநல்லூரில் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஒருவர் திமுக எம்எல்ஏவை பாராட்டி போஸ்டர் ஒட்டியும், நேரில் வாழ்த்து தெரிவித்ததாலும் அதிமுகவினரிடையே பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி முதல்முறையாக போட்டியிட்டார் கதிரவன். அது போல் அந்த தேர்தலில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.
இதில் சுமார் 59 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார்.
எம்எல்ஏவாக பதவி வகித்தவுடன் கொரோனா இரண்டாம் பரவலால் மக்களுக்கு ஏற்படும் அதிக பாதிப்பைத் தடுத்தார். மேலும் அரசு அறிவித்த கொரோனா பொது முடக்கத்தால் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். .

எம்எல்ஏ கதிரவன்
இதனை அறிந்த தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் தொகுதியில் உள்ள பரவலான மக்களுக்கு அரிசி, பருப்பு , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள், உடைகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாரி வழங்கினார். பொது மக்கள் மட்டுமல்லாது தனது சொந்த கட்சிகாரர்களுக்கும் உதவினார்.

பூட்டிய அலுவலகம்
இது மட்டுமல்லாது கடந்த 5 ஆண்டுகளாகவே பூட்டிய நிலையில் இருந்த சட்ட மன்ற அலுவலகத்தினை தூய்மைப்படுத்தி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திறந்து வைத்து மக்கள் குறைகளை தினசரி கேட்டறிந்து வருகிறார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியிலும், மக்களுக்கு எங்கு உணவு உள்ளிட்ட தேவைகள் உள்ளதோ அவற்றினை அறிந்து ரூ. 75 லட்சத்திற்கு மேல் கொரோனா பரவல் காலத்தில் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெ.
மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சொல்லும் தாரகை மந்திரமான மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வார்த்தைக்கு ஏற்ப மக்களால் எம்எல்ஏவான கதிரவன், அவரது தொகுதி மக்களுக்காகவே தினமும் ஏதாவது உதவிகள் மட்டுமல்லாது, தொகுதியில் மக்கள் குறைகளை கட்சியினர் புடைச் சூழ சென்று கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

பாராட்டிய அதிமுக
இந்நிலையில் தான் இவரது செயலைப் பாராட்டி திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

நல்லது செய்த எம்எல்ஏ
இது குறித்து அதிமுக பிரமுகர் முருகானந்தனிடம் கேட்ட போது, மண்ணச்சநல்லூர் தொகுதியில் இதுவரை இருந்த எம்எல்ஏக்கள் யாவரும் செய்யாததை இவர் தனது சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அவரது செயலை பாராட்டுவதில் எவ்வித தவறும் இல்லை. இது குறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன் என்றார் முருகானந்தம்.












Click it and Unblock the Notifications