தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப்படுத்த குவியும் விண்ணப்பங்கள்.. கவனிக்க வேண்டியவை
திருச்சி: அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு 6 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பக்கலாம். திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 4,202 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 6 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசின் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதன்படி, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன் முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் வருகிற பிப்ரவரி மாதம் 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான உள்ளூர் திட்ட குழுமங்கள் மற்றும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களில் மனைகளை வரன்முறைப்படுத்தக்கோரி பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.
இதனிடையே திருச்சி மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாவட்ட நகர் ஊரமைப்பு குழு அலுவலகத்திலும் மனைகளை வரன்முறைப்படுத்தக்கோரி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் மனைகளை வரன்முறைப்படுத்தக்கோரி 4,202 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. இவற்றில் 195 விண்ணப்பங்கள் புதிய மனைப்பிரிவு அங்கீகாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். மற்றவை தனிப்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் (Restrictions for regularization of unapproved plots and layouts) என்னென்ன என்பதை பார்ப்போம்..
i. நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள்
ii. அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள்
iii. திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள்
iv. அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot)
v. உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள். rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள்
vi. பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள் நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம்
vii. அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள்.












Click it and Unblock the Notifications