ஆம்புலன்ஸில் செய்யிற வேலையா இது.. தஞ்சை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. பாராட்டிய ஐஜி பாலகிருஷ்ணன்
திருச்சி: ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஒரு கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். திறமையாக செயல்பட்ட தஞ்சை போலீஸ் டீமுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து பல்வேறு வழிகளில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுவது அதிகரித்துள்ளது. அப்படி கடத்தி கொண்டுவரப்படும் கஞ்சா மற்றும் கடத்தும் நெட்வொர்க்குகளை கைது செய்யும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தது.

கஞ்சா
அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பையை எடுத்து போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

35 கிலோ
மதுரை நகா் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வந்தது. அதனைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டிருந்தாா். இதனடிப்படையில் மதுரை நகா்பகுதியில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த இரண்டுக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து மற்றும் வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கரிமேடு பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநிலப் பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 35 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஹரிகுமாா், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஈஸ்வர ராவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன்
இதனிடையே ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு நாகையிலிருந்து கஞ்சா கடத்ததுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தஞ்சை நாகை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாகையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி போலிசார் சோதனை செய்தனர்.

200 கிலோ கஞ்சா
அந்த ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலிசார் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நாகையைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மார்சல் டெரன்ஸ் ராஜாவை விசாரணை செய்ததில், போலிசாரிடம் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார்.

விசாரணை
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 கோடி எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலர்களுக்கு பாராட்டு
இதனிடையே ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தியதை கண்டுபிடித்து கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தியவரை கைது செய்த ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்களுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
