சென்னை தம்பதிக்கு திருச்சியில் கனவிலும் நடக்க கூடாத சம்பவம்.. இப்படி கூட நடக்குமா? பெரும் சோகம்
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மரக்கிளை விழுந்து சென்னையை சேர்ந்த தம்பதி பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. உறவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
ஒருசில நேரங்களில் கனவில் தான் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நாம் நினைத்திருப்போம். அதாவது பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இந்த பஸ் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் விழுந்தால் எப்படி இருக்கும்.. என நினைத்திருக்கக் கூடும். இதேபோல் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நம் மீது மரமோ, கம்பியோ, போஸ்ட் மரமோ விழுந்தால் என்ன ஆகும் என கனவில் நினைத்து துடிதுடித்து போய் இருக்கக் கூடும்.

சென்னையை சேர்ந்த கணவன் - மனைவி
ஆனால் நிஜத்திலேயே இப்படியொரு சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. அதுவும் சென்னை தம்பதிக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது திடீரென மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்ததில், கணவன் மனைவி இருவரும் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 40). இவரது மனைவி புனிதா (37). கணவன் மனைவி இருவரும் திருச்சி லால்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பங்கேற்க திட்டமிட்டனர். இதன்படி நேற்று அவர்கள் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் சென்றனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் லால்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். சமயபுரத்தை அடுத்த அகிலாண்டபுரம் பனையடிகருப்பு கோவில் அருகே வந்துகொண்டிருந்தனர்.
மரக்கிளை விழுந்து பலி
அப்போது காற்றுடன் மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிராபாரத வகையில் திடீரென மரக்கிளை ஒன்று உடைந்து கணவன் - மனைவி சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் மரக்கிளை விழுந்ததால், சுதர்சன், புனிதா இருவரும் படுகாயமடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் மரக்கிளையானது அந்த வழியாக சென்ற மின்கம்பிகள் மீதும் விழுந்ததால் அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது
இதில் மோட்டார் சைக்கிள் மீது மின்சாரம் பாய்ந்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் எலும்புக் கூடாக மாறியது. விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மாநகராட்சி ஊழியர்கள், மின் ஊழியர்களும் நிகழ்விடத்திற்கு வந்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சமயபுரம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் மரக்கிளை விழுந்து சென்னையை சேர்ந்த கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications