"நான் இல்லை.. ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்".. விரைவில் அறிவிக்கப்போகும் விஜய்? அமைச்சர் உறுதி
திருச்சி: ''போராட்ட வாழ்க்கைக்கும், தியாகத்திற்கும் சொந்தக்காரரான ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்பதை காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். விஜய் பிரதமர் வேட்பாளர் என்கிற கருத்து தவறாக கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜய் அறிவிப்பார், அறிவிக்கக்கூடும்'' என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் தான் திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: '' நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறும்.
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள ஒவ்வொரு வழக்கும் வித்தியாசப்படும். சட்டசபையில் முதலமைச்சர் பேசுவது தவறாகவே ஆகாது. அவர் பேசுவதற்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது. முதலமைச்சரின் பதிலுரை சட்டமன்ற வரலாற்றிலேயே முக்கியமான உரையாக இருக்கிறது என நான் சட்டசபையில் பேசினேன்.
பிரதமர் வேட்பாளர் யார்? என்று கூறுவதில் எங்களுக்கு தயக்கமே கிடையாது. நான் பிறப்பால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். எங்களுடைய ஒரே கருத்து ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக கூறுவார்கள். அந்த வகையில் 140 ஆண்டுகால பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுல் காந்தியை தான் கூறுகிறோம். அதில் எந்த தவறும் கிடையாது'' என்றார்.
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூற மாணிக்கம் தாகூர் தயக்கம் காட்டுகிறாரே? என்கிற கேள்விக்கு, '' காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் என்கிற முறையில் நான் பகிரங்கமாக கூறுகிறேன். 2029 ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.
விஜய் பிரதமர் வேட்பாளர் என்கிற கருத்து தவறாக கணிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜய் அறிவிப்பார், அறிவிக்கக்கூடும். ராகுல் காந்தியை பிரதமராக விஜய் அறிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தான கேள்வி இப்போது தேவையில்லை.
உலக வரலாற்றில் ராகுல் காந்தியின் போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது போராட்டமும் தியாகமும் நிறைந்த ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் அதற்காக நாங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறோம். எங்கள் கூட்டணியில் இடதுசாரிகளும் இணைவார்கள் என்கிற நம்பிக்கையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.
விலைவாசி உயர்வு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற கேள்விக்கு, '' அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜயின் இமேஜ் உச்சத்தில் தான் இருக்க போகிறது. நிச்சயம் இந்த இடைத் தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். விலைவாசி உயர்வு குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவோம் ஆனால் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மீண்டும் மீண்டும் உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்'' என்றார்.


Click it and Unblock the Notifications
