ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம்.. திமுகவின் வாக்குறுதியை கொஞ்சம் மாற்றி அறிவித்த எடப்பாடி பழனிசாமி!
திருச்சி: 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2021 சட்டசபைத் தேர்தலில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று திமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. அதனை கொஞ்சம் உயர்த்தி எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அதிமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.1500ஆக உயர்வு, பெண்களுக்கு பட்டுப்புடவை, புதிதாக திருமணமாகும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் பணம், பட்டு வேஷ்டி, சேலை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய வாக்குறுதியை அளித்தார்.
அதன்படி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சியில் திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின் மின்சாரம், கட்டுமானப் பொருட்கள் விலை, வீட்டு வரி, அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக ஆட்சியில் 12 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், இலவச லேப்டாப் திட்டம்,. அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது.
மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வரும் போது, அனைத்து திட்டங்களும் தொடங்கப்படும். அதேபோல் புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால், பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுக தரப்பில் ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று கூறி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications