மகனை திருச்சி மேயராக்க விரும்பும் Ex அமைச்சர்; பட்டும்படாமலும் பதிலளித்த பட்டுக்கோட்டைக்காரர்!
திருச்சி: முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது மகனை திருச்சி மேயராக்குவதற்கு இப்போதே மேலிடத்தில் காய் நகர்த்த தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக வைத்திலிங்கத்தின் சிபாரிசை எதிர்பார்த்து காத்திருக்கும் வெல்லமண்டியாருக்கு பட்டும்படாமலும் பதிலளித்திருக்கிறாராம் அவர்.
இதனிடையே திருச்சி மாநகராட்சி 20-வது வார்டில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை கொடுத்துவிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் வெல்லமண்டி நடராஜன் மகன்.

முன்னாள் அமைச்சர்
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தனது மகன் ஜவஹர்லால் நேருவை அதிமுக சார்பில் திருச்சி மேயர் வேட்பாளராக களமிறக்க விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. இதற்காக வைத்திலிங்கம் மூலம் காய் நகர்த்தி வரும் நிலையில், உறுதியான பதில் எதுவும் அவரிடமிருந்து கிடைக்கவில்லையாம். காரணம் வைத்தியின் பேச்சே இப்போது லாயிட்ஸ் சாலையில் எடுபடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு
அருவா மீசையுடன், கழுத்தில் தங்கச்சங்கிலி மின்ன ஜவஹர்லால் நேரு போஸ் கொடுத்த புகைப்படத்தை தான் அவரது ஆதரவாளர்கள் திருச்சியெங்கும் சுவரொட்டிகளாக ஒட்டி மக்கள் மத்தியில் அவரது முகத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தந்தை வெல்லமண்டி நடராஜன் எந்தளவு எளிமையானவரோ அதற்கு நேர்மாறானவர் ஜவஹர்லால் நேரு எனக் கூறப்படுகிறது.

20-வது வார்டு
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தனது தந்தையும், மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜனிடம் அளித்துள்ள ஜவஹர்லால் நேரு எப்படியும் தாம் தான் வேட்பாளர் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு போட்டியாக மேயர் சீட் கேட்டு பெரியளவில் தலைமைக்கு பிரஷர் இருக்காது என எதிர்பார்த்த நிலையில், ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயன் தம்பி உட்பட இன்னும் சிலர் போட்டியாக நிற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்திலிங்கம்
தனது மகனுக்காக வைத்திலிங்கம் மேலிடத்தில் பரிந்து பேசுவார் என முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் வெல்லமண்டியார். இதனிடையே நேரடியாக இ.பி.எஸ். மூலம் தம்பியை மேயர் வேட்பாளராக களமிறக்க காய் நகர்த்தி வருகிறாராம் ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயன். இன்னும் ஒரு வாரத்தில் திருச்சி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications