விநாயகர் சதுர்த்தி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்!
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடைகொண்ட ராட்சத கொழுக்கட்டை இன்று படைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் நல்லபடியாக அமையும் என்பது இந்துமக்களின் நம்பிக்கையாகும். இதனால் முழுமுதற்கடவுளான விநாயகரை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தென் கைலாயம் என போற்றி வணங்கப்படும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது, சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது, மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி விழா, இந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருச்சி மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளிக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைப்படுவது வழக்கம்.
இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியுடன் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியான இன்று அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர், திருச்சி மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளிக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டு பின்னர் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவதால், தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வழிபட்டுச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா விழாவையொட்டி இன்று முதல், அடுத்த மாதம் 12-ந்தேதி வரை தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர், சித்திபுத்தி கணபதி, நர்த்தன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications