''நிலவின் தென்துருவம் என்ன சன்னியாசி மடமா? சிவசக்தி என்ற பெயர் எதற்கு?'' -கொதிக்கும் இனிகோ இருதயராஜ்
திருச்சி: ஏதோ சன்னியாசி மடங்களுக்கு பெயர் வைப்பது போல் விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு ''சிவசக்தி'' என பெயரிடப்பட்டிருப்பது அறிவியலுக்கு நேர்ந்த அவமானம் என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.
மதங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் கடந்தது தானே அறிவியல், அங்கு போய் மதப்பற்றை திணிக்கலாமா? என பிரதமர் மோடிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள பதிவு வருமாறு;

''இந்திய விஞ்ஞானிகளின் ஒட்டுமொத்த உழைப்பால் நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி என பெயர் சூட்டி சந்திரயான் திட்டத்தையே பிரதமர் மோடி களங்கப்படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டில் எப்போதும் தான் சார்ந்திருக்கிற மதத்தைப் பற்றிய சிந்தனைதானா என்றும் அவர் மீது கேள்விக்கனைகள் பாய்கின்றன.''
''பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர், சந்திரயான் திட்ட வெற்றிக்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அவர், சந்திரயான் திட்டம் மூலம் இந்தியாவின் லேண்டர் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய நாள் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும் விண்கலம் தடம் பதித்த இடத்திற்கு சிவசக்தி என்றும் பெயர் சூட்டினார். ''
''பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்குச் சென்று அங்கு விண்கலத்தை இறக்கி சோதனை செய்வது விண்வெளி ஆராய்ச்சியின் மிகப்பெரிய உச்சம். ஆனால் அதற்கு நேர் எதிராக தான் சார்ந்து இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் சார்ந்த ஒரு பெயரை அந்த இடத்திற்கு சூட்டியிருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு போகும் போது, இந்து மதம் தொடர்பான கோவில்களுக்கு போகும்போது, இந்து மதம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடும் போது நீங்கள் இது போன்ற என்ன பெயர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் மதங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் கடந்ததுதானே அறிவியல். அங்கு போய் மதப்பற்றை திணிக்கலாமா? ''
''சிவசக்தி என பெயர் சூட்டியதற்கு வசதியான ஒரு காரணத்தையும் மோடி அப்போது சொல்லி இருக்கிறார். அதாவது சந்திரயான்-2 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் அவர்களை கௌரவிக்க இந்தப் பெயர் சூட்டப்பட்டதாக கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் கூட சிவ சக்தியில் சக்தி மட்டும் தானே பெண்; சிவன் அங்கே ஆண் தானே.''
''உண்மையிலேயே மோடி அவர்கள் பெண்களை கௌரவிக்க நினைத்திருந்தால் இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய பெண் விஞ்ஞானிகள் யாராவது ஒருவரின் பெயரை தானே சூட்டி இருக்க வேண்டும். இந்தியாவின் ஏவுகணைப்பெண் என்ற பெருமையைப் பெற்றவரும், அக்னி- 4 ஏவுகணை திட்டத்தில் பங்கு வகித்தருமான டெசி தாமஸ் பெயரை பிரதமர் சூட்டியிருக்கலாமே. சரி மோடியின் பார்வையில் அவர் கிறிஸ்துவர் என்பதால் அவர் பெயர் வேண்டாம்; குழந்தைகளை தாக்கும் நோய் கிருமிகளை ஒழித்தவரும் உலக சுகாதார அமைப்பின் ஆசிய மண்டல நிர்வாகியாகவும் இருந்த நாட்டின் மிகப்பெரிய வைரலாஜிஸ்ட் பெண் விஞ்ஞானி ககன் தீப் காங் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கலாமே. ஓ அவர் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்; சரி அந்த பெயரும் வேண்டாம், நாட்டின் முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி. இந்திய நவீன அறிவியலின் தந்தை எனப்படும் சர் சி.வி ராமனின் ஆய்வகத்தில் பணிபுரியும் ஆர்வத்தாலேயே நுண்ணலை பொறியியல் விஞ்ஞானியாக ஜொலித்த அவரது பெயரை நிலவின் தென்துருவத்திற்கு சூட்டி இருக்கலாமே.''
''இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் மோடி உரையாற்றியபோது திரண்டு இருந்த விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவர் இருந்திருக்கலாம்; ஒரு இஸ்லாமியர் இருந்திருக்கலாம்; ஒரு சீக்கியர் இருந்திருக்கலாம்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இருந்திருக்கலாம்; சிவசக்தி என்ற பெயரை நீங்கள் உச்சரித்த போது அவர்களின் உணர்வுகள் என்ன பாடுபட்டிருக்கும்? இந்தியன் என்ற அவர்களது உணர்வை உங்கள் இந்துத்துவா சித்தாந்தம் கண நேரத்தில் கொச்சைப்படுத்தி விட்டதே. இவையெல்லாம் உங்கள் மனக்கண் முன் தோன்றவில்லையா மோடி ஐயா அவர்களே.''
''கடந்த 1975 ஆம் ஆண்டு இந்தியா முதன் முதலில் விண்ணில் செலுத்திய செயற்கைக்கோளுக்கு ஆரியபட்டா என பெயர் வைக்கப்பட்டது. நமது நாட்டின் தொன்மை காலத்து கணிதவியல் மேதையும், மிகச் சிறந்த வானியல் நிபுணருமான ஆரியபட்டாவின் பெயர்தான் அது. நாட்டின் முதல் செயற்கைக்கோளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது எவ்வளவு பொருத்தமானது. ஒரு பெயர் சூட்டல் என்பது அப்படி அல்லவா இருக்க வேண்டும்.''

''நேபாளத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்திற்கு அந்தப் பெயர் வர காரணம் என்ன? 1865 ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர்தான் அந்த சிகரத்தின் உயரத்தை துல்லியமாக அளந்து உலகின் மிகப்பெரிய சிகரம் அதுதான் என அறிவித்தார். அதன் அடையாளமாக தான் அந்த சிகரம் இன்றும் எவரெஸ்ட் சிகரம் என்றே அழைக்கப்படுகிறது. பெயர் பொருத்தம் என்பது இப்படி அல்லவா இருக்க வேண்டும்.''
''ஏதோ சன்னியாசி மடங்களுக்கு பெயர் வைப்பது போல் விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சிவசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இது அந்த சாதனைக்கே வந்த சோதனை அல்லவா? மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே சட்டம்; ஒரே ரேஷன் கார்டு கோட்பாட்டை விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திலுமா கொண்டு வந்து திணிப்பது? ''
''நமது எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடும் சீனா அதற்கு "தென் திபெத்" என பெயரிட்டுள்ளது. அந்த இடத்தை சீனாவிடமிருந்து மீட்டு பாஜக அரசு அதற்கு என்ன பெயர் வைக்கப் போகிறது? நாடு முழுவதும் உள்ள நடுநிலையாளர்கள் பலரும் மோடி ஐயாவிடம் இது போன்ற கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.''












Click it and Unblock the Notifications