இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? அமரன் படத்திற்கு எதிராக சூடுபிடித்த போராட்டம்! சிக்கலில் கமல்ஹாசன்
திருச்சி: கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று திருச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ் திரையுலகத்தை பிடித்த மிகப்பெரிய சாபக்கேடு, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதுதான் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில், ரோஜா தொடங்கி, அமரன் வரை இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்பதை போன்ற பிம்பம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனின் 'உன்னை போல் ஒருவன்', 'விஸ்வரூபம்' போன்ற திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திருப்பதாக கூறி இந்த படங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களும், ஜனநாயக அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருந்தன.

சமீபத்தில் வெளியாகியிருந்த கேரளா ஸ்டோரி மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இப்படியாக தங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் திரைப்படங்களை எதிர்த்து தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று அவரது உருவபொம்மையை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தில் 30க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். அவர்கள் திடீரென கமல்ஹாசன் மற்றும் அமரன் படத்தில் ஹீரோவாக நடத்திருந்த சிவகார்த்திகேயன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து, "இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது" என்று கண்டனங்களை முழங்கினர்.
இந்நிலையில், இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications