ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை.. வந்து விழுந்த கேள்வி! உற்று கவனித்து அமைச்சர் நேரு
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக கே.என்.நேரு சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சர்களில் ஒருவருமான அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
அப்போது அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரை கடத்தினர். அதன் பின்னர் கல்லணை சாலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிடிக்க முடியவில்லை
இது அரசியல் அரங்கில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ராமஜெயம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. முக்கிய ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என 1000க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தும் கூட 10 ஆண்டுகளாக போலீசாரால் கொலையாளிகளை நெருங்க முடியவில்லை.

விசாரணை
இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், ராமஜெயம் சகோதரரான அமைச்சர் நேருவிடமும் இரு முறை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் போலீஸ் அறிவித்து உள்ளனர்.

கார்
கொலைக்குப் பின்னர், அங்கிருந்த சுங்கச்சாவடியில் அருகே குறிப்பிட்ட காரில் ஏறி கொலையாளிகள் தப்பிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் இது வழக்கு விசாரணை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பினர். திருச்சி கலையரங்கத்தில் தொலைநோக்கு திட்ட ஆவணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் நேரு
இதில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திருச்சி மாநாட்டில் 7 துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

திருச்சி திட்டங்கள்
அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எந்தெந்த துறைகளில் என்ன திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஏழை எளியோருக்குத் தேவையான குடி நீர் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம். விரிவான திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு திட்டங்களை மெல்ல நடைமுறைப்படுத்துவோம்" என்றார்.

வழக்கு விசாரணை
அதைத் தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இன்று டிஜிபி விசாரணை நடைபெற உள்ளதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "இந்த வழக்கை இப்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே, இது குறித்து எவ்வித கருத்தும் கூற முடியாது" என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications