விஜய் குறித்த கேள்வி.. “அந்த நகைச்சுவை செய்ய நான் தயாராக இல்லை..” நாம் தமிழர் சீமான் டென்ஷன்
திருச்சி: விஜய் கட்சி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகைச்சுவையை எல்லாம் செய்ய நான் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், அடுத்து 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினர். சினிமாவுக்கு நடுவே அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார்.

விஜய் அரசியல்: இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் படத்தில் நடித்து வரும் விஜய், இத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இதற்கிடையே அதிமுகவும் தவெக கட்சியும் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தகவல் பரவியது. கடந்த மாதம் நடந்த மாநாட்டில் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால், அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதை வைத்தே இந்த கூட்டணி குறித்த பேச்சு எழுந்தது. இருப்பினும், அதற்கு இன்று விஜய் கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
சீமான்: இதற்கிடையே அதிமுக- தவெக இடையே கூட்டணி இல்லை என்பது குறித்த இந்த அறிவிப்பு குறித்த கேள்விக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், தன்னால் நகைச்சுவை எல்லாம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், "மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் கேட்காதீர்கள்.. எங்கள் நிலைப்பாடு என்ன.. நாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து மட்டும் கேளுங்கள்.
"கஸ்தூரியை கைது செய்தது தவறு.. ஜெயிலில் போடும் அளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்.." சீறும் சீமான்
நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில் 117 பெண்களுக்கும், 117 ஆண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு தரப்படும். எனவே, எங்கள் திட்டம் என்ன என்பது குறித்தே என்னால் பேச முடியும்.
நகைச்சுவைக்குத் தயாராக இல்லை: யார் யாருடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு என்ன.. "இந்த காரை இப்போ யார் வைச்சு இருக்கா" என்று கரகாட்டக்காரன் படத்தில் வரும். அதுபோன்ற நகைச்சுவையை எல்லாம் செய்ய நான் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
தனித்து போட்டி: அதிமுக கூட்டணியைப் பலப்படுத்துவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்குச் சீமான், "அது ஒரு நம்பிக்கை தானே.. அதேநேரம் நாங்கள் தனித்துத் தான் போட்டியிடப் போகிறோம். கூட்டணி குறித்து யோசிக்கப் போவதில்லை. கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம் என்பதே எனது கோட்பாடு. அடுத்தவன் தோள் மீது ஏறி நின்று நான் உயர்ந்தவன் எனக் காட்டுவதை விட, தனியாக நின்று உன்மையான உயரத்தைக் காட்டுவது மேலானது என்பதே எனது நிலைப்பாடு. எனது கால்களை நம்பி தான் எனது பயணம் தொடங்கப்பட்டது. இப்போது வரை தொடர்கிறது.
அடுத்தவர் கால்களைக் கால்களை நம்பி எனது லட்சிய பயணத்தைத் தொடர முடியாது. நான் திருப்பூருக்குப் போக வேண்டும் எனச் சொல்ல.. அவர் திருப்பதி போனால் என்ன செய்வது. இதனால் எனது பயணம் என்னைக் கால்களை நம்பியே இருந்தது. இனியும் அதுவே தான் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications