படை திரட்டும் வேல்முருகன்! பாமகவிலிருக்கும் இளைஞர்களுக்கு பாசவலை! ஊர் ஊராக சுற்றுப்பயணம்!
திருச்சி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைப்பு விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது.
அதில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் தங்களை வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதேபோல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவிலிருக்கும் இளைஞர்களுக்கு பாசவலை வீசியிருக்கிறார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை அடுத்தக் கட்டத்தை நோக்கி வளர்த்தெடுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன். மாற்றுக்கட்சிகளை சேர்ந்த இளைஞர்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் மட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கூட உடனடியாக தனது ரியாக்ஷனை வெளிப்படுத்துவதால் ஆதரவும் செல்வாக்கும் கணிசமாக அவருக்கு உயரத் தொடங்கியுள்ளது.

என்.எல்.சி.பிரச்சனை
குறிப்பாக என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்காக நியாயம் கேட்டு அவர் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நெய்வேலி பகுதியில் ஆதரவை அதிகரிக்க வைத்துள்ளது. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இணைந்துள்ளனர். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சற்று அதிர்ச்சியுடன் பார்க்கின்றன. வேல்முருகனுக்கு போட்டியாக பாமக தரப்பிலும் கடுமையான டஃப் கொடுக்கப்படுகிறது.

மத்திய மாவட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை வட மாவட்ட கட்சி என்ற குறுகிய பிம்பத்திற்குள் அடைக்க விரும்பாத வேல்முருகன், இப்போது ஊர் ஊராக சுற்றுப்பயணம் செல்ல ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நேற்று கூட திருச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 300 இளைஞர்கள் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கான இணைப்பு விழாவில் பேசிய வேல்முருகன், தன்னை நம்பி கட்சியில் இணைந்தவர்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் அளித்தார்.

அமைப்பு பலம்
இதேபோல் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்சியின் அமைப்பை மேலும் வலிமைப்படுத்தும் திட்டத்தில் உள்ள வேல்முருகன் விரைவில் மதுரை, நெல்லை, கோவை, திருப்பூர், என ஒரு டூர் அடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications