அடடே.. இப்படியும் ஒரு உயரதிகாரியா? - ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி கிளார்க்கிற்கு கௌரவம்.. நெகிழ்ச்சி!
திருச்சி : பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியரை தனது இருக்கையில் அமர வைத்து கௌரவித்துள்ளார் ரயில்வே உயர் அதிகாரியாக பணிபுரியும் பெண் அலுவலர் மோகனப்பிரியா.
எழுத்தராகப் பணிபுரிந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான நாகராஜன் நேற்றோடு ஓய்வு பெற்ற நிலையில், அவரை அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையும் கௌரவித்து நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் உயரதிகாரியான மோகனப்ரியா.
இச்செயல், நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் ஒரு உயரதிகாரியா என பலரும் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்

ரயில்வே அலுவலக ஊழியர்
திருச்சியில் உள்ள தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வந்தவர் நாகராஜன். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் பதிவேடுகள் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். தனது பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நாகராஜன் நேற்றோடு ஓய்வு பெற்றார்.

தனது சீட்டில் அமர வைத்த உயரதிகாரி
நாகராஜனின் பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வு நேற்று மாலை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக, அவரது அலுவலகத்தின் உயர் அலுவலர்களில் ஒருவரான திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்ரியா, நாகராஜனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தனது இருக்கையில் அமரச் செய்துள்ளார்.

குடும்பத்தினர் நெகிழ்ச்சி
நாகராஜனின் மனைவி மற்றும் மகளை அருகில் நிற்கவைத்து தானும் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன் நாகராஜனின் பணிகள் பற்றியும் குடும்பத்தினர் மத்தியில் வெகுவாக பாராட்டினார். இச்செயலால், நாகராஜன், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் ஊழியர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.

மனம் மகிழ்ந்த நாகராஜன்
தனது பணி ஓய்வு நாளில், பெருமைப்படுத்திய வணிக மேலாளர் மோகனப்ரியாவின் கையைப் பிடித்துக் கொண்டு நாகராஜன் நன்றி தெரிவித்தார். கடைநிலை ஊழியரின் இறுதி பணி நாளன்று, அவரது பணிகளைப் பாராட்டி, அவரை தனது இருக்கையிலேயே அமரச் செய்து கௌரவித்த பெண் அலுவலரின் செயலை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications