அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அண்ணாமலையைச் சுற்றியே பரபரப்பு நீடித்து வருகிறது. புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்கள் ஒரு பக்கம் பரவி வரும் நிலையில், தற்போது பாஜகவில் இருந்து சுமூகமாக விலக விருப்பம் தெரிவித்து கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை கடிதம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், அண்ணாமலையை எந்தவிதத்திலும் இழக்கக் கூடாது என்ற முடிவில் பாஜக தேசிய தலைமை இருப்பதாகவும், அவரை தக்க வைக்க பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது அரசு பணியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தபோது, அவரை சாதாரண அரசியல்வாதியாக பலரும் பார்க்கவில்லை. காரணம் கர்நாடக காவல்துறையில் அவர் செய்த சம்பவங்கள் அப்படி.

Annamalai

இளம் வயதிலேயே துணிச்சலான முடிவை எடுத்தவர் என்ற அடையாளத்துடன் பாஜகவில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார். அவரது தலைமையில் தமிழக பாஜக புதிய தோற்றத்தை பெற்றதாகவே அக்கட்சியினர் கூறி வந்தனர்.

அண்ணாமலை

சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமான பிரச்சாரம், நேரடி அரசியல் விமர்சனங்கள், "என் மண் என் மக்கள்" நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் என அண்ணாமலை தனக்கென ஒரு அரசியல் பாணியை உருவாக்கினார். இதன் விளைவாக, பாஜக பாரம்பரிய ஆதரவாளர்களை தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு தனிப்பட்ட செல்வாக்கு உருவானது. பல அரசியல் விமர்சகர்கள் கூட, "பாஜகவை விட அண்ணாமலை என்ற பிராண்ட் தமிழ்நாட்டில் வேகமாக வளர்கிறது" என்று கருத்து தெரிவித்தனர்.

தமிழக பாஜக

ஆனால் இந்த வளர்ச்சியே கட்சிக்குள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக அதிமுக கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், மாநில அரசியலில் அவரது சுயாதீன அணுகுமுறை உள்ளிட்டவை தேசிய தலைமையை சிக்கலில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அண்ணாமலைக்கு தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல்

ஆனால் ஓராண்டுக்கும் மேலாகியும் எந்த பதவியும் அறிவிக்கப்படவில்லை. மாநிலத் தலைவர் பதவி இல்லை, மத்திய அரசில் பொறுப்பு இல்லை, தேசிய அமைப்பிலும் முக்கிய இடம் இல்லை என்ற நிலை உருவானது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பங்கேற்ற அவர், நேரடியாக களமிறங்காமல் இருந்தார்.

பாஜக தலைமை

தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. கடந்த காலத்தை ஒப்பிடும்போது கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்ததாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இந்த சூழலில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது, பாஜக தலைமையுடனான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியது.

அண்ணாமலை புதிய கட்சி

அதன்பிறகே அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கின. குறிப்பாக, தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வெற்றி இளைஞர்கள் மத்தியில் புதிய அரசியல் நம்பிக்கையை உருவாக்கியிருப்பதாகவும், அதேபோன்ற மாற்று அரசியல் களத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அண்ணாமலை தரப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்தான் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

நிதின் நபின்

அவர் தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாஜகவில் இருந்து விலகுவதற்கான தனது காரணங்களை விளக்கும் வகையில் ஐந்து பக்க கடிதத்தையும் தேசிய தலைமைக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அண்ணாமலை ஆதரவாளர்கள்

அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும் கருத்துகளும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. "தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அண்ணாமலை. இளைஞர்கள் மத்தியில் அவருக்கு தனி ஆதரவு உள்ளது. அவர் தனிக்கட்சி தொடங்கினால், எதிர்கால அரசியல் போட்டி விஜய்யும் அண்ணாமலையும் மையமாகக் கொண்டதாக மாறும்" என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் மறுபுறம், அண்ணாமலையை இழப்பது தமிழக பாஜகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தேசிய தலைமை கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத் தலைவர் பதவி

இதனால் அவருக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி வழங்குவது, மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பது அல்லது மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்குவது போன்ற பல்வேறு ஆஃபர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை இறுதியாக எந்த முடிவை எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+