பழனி நில வழக்கு! தமிழக அரசு திட்டமிட்டு என்னை குற்றவாளியாக்க பார்க்கிறது.. சார்பதிவாளர் பகீர் வாதம்
மதுரை: பழனி கோவில் நிலத்தை பாலச்சந்தர் என்ற பதிவாளர் 3ம் தேதியை பதிவு செய்துவிட்டார். ஆனால், அரசு திட்டமிட்டு என்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளதாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வாதம் வைத்துள்ளது.
பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. ₹100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை ஒரே நாளில் பத்திரப்பதிவு செய்து கொடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கொடைக்கானல் பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வழக்கறிஞரும் அரசுத் தரப்பும் முன்வைத்த வாதங்கள், இந்த ஊழலில் இதுவரை மறைக்கப்பட்டிருந்த இன்னொரு அதிகாரியின் பெயரையும், துறையின் குளறுபடிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
என்னை மட்டும் பலிகடா ஆக்குவதா
நீதிமன்றத்தில் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிக முக்கியமான ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்த ரூ.100 கோடி நிலத்தை ஜூலை 6-ஆம் தேதி ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்யவில்லை. அதற்கு முன்பே, ஜூலை 3-ஆம் தேதியே பாலச்சந்தர் என்ற மற்றொரு சார்பதிவாளர் இந்த நிலத்தைப் பதிவு செய்து முடித்துவிட்டார்.
ஆனால், அரசுத் தரப்பு திட்டமிட்டோ அல்லது உள்நோக்கத்துடனோ பாலச்சந்தரை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைத்துவிட்டு, 6-ஆம் தேதி மாற்று டூட்டிக்கு வந்த ஜஸ்டின் மணிகண்டனை மட்டும் குற்றவாளியாக்கி சஸ்பெண்ட் செய்துள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அதிரடி வாதத்தை முன்வைத்தார்.
இல்லை... அவர்தான் முடித்தார்
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஜூலை 3-ஆம் தேதி சார்பதிவாளர் பாலச்சந்தர் காலத்தில் அந்தப் பத்திரப் பதிவுக்கான ஆரம்பகட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. அந்தப் பதிவு முழுமையாக நிறைவடையவில்லை.
கொடைக்கானலில் இருந்து 60 கிமீ தூரம் பயணித்து வந்த ஜஸ்டின் மணிகண்டன்தான், விதிமுறைகளை மீறி முறைப்படி அந்தப் பத்திரப்பதிவுப் பணிகளை முடித்து வைத்துள்ளார். எனவே, அவர்தான் முதல் குற்றவாளி" எனப் பதிலடி கொடுத்தார்.
நீதிபதியின் கிடுக்கிப்பிடி கேள்வி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் காவல்துறையும் பத்திரப்பதிவுத் துறையும் காட்டும் பாரபட்சத்தை சுட்டிக்காட்டினார்:
ஜூலை 3-ஆம் தேதியே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றால், ஏற்கனவே அந்தப் பத்திரப்பதிவை முன்னெடுத்த முந்தைய சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? தவறு நடந்திருப்பது உறுதியானால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரு சார்பதிவாளர்கள் மீதும் அல்லவா காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஏன் ஒருவரை மட்டும் குறிவைக்கிறீர்கள்? என நீதிபதி கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
நீதிமன்ற உத்தரவு
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜஸ்டின் மணிகண்டன் காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்ஜாமீன் கிடைத்திருந்தாலும், இந்த நீதிமன்ற விவாதத்தின் மூலம் பாலச்சந்தர் என்ற புதிய அதிகாரியின் பெயர் இந்த மோசடிப் பட்டியலில் இணைந்துள்ளது. ஏற்கனவே இரு அதிகாரிகள் மறுத்தார்கள் என பேசப்பட்ட நிலையில், ஒரு அதிகாரி டாக்குமென்ட்டைப் பாதி வரை ஆன்லைனில் பிராசஸ் செய்து வைத்திருந்த விபரம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
