நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!
திருச்சி : நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அவரது ரசிகர்கள் கோயில் தேரை இழுத்து வழிபட்டனர்.
Recommended Video
புதுச்சேரியிலும் மணக்குள வினாயகர் கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்ட ரஜினி ரசிகர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர்கள் இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அபூர்வராகங்கள் முதல் அன்னாத்தே வரை
இயக்குநர் கே பாலசந்தரால் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த், 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி
ரஜினிகாந்த்துக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் 'நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; தனது அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அன்னதானம்
இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ராகவேந்திரா கோவிலில் வெள்ளித்தேரை இழுத்தனர். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு இருந்து ரசிகர்களுக்கு மேலும் பல திரைப்படங்களை தரவேண்டும் என்ற பிரார்த்தனையோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில் நடைபெற்றது. இதை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சுதர்ஷன், கர்ணன் பாலன், ராயல்ராஜ், ரெங்கராஜ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மணக்குள விநாயகர் கோயில் பூஜை
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் மணக்குள விநாயகர் ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதுமட்டுமின்றி மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications