திருச்சி KK நகர் வீட்டில் அரிய உயிரினம்! கிட்ட போய் பார்த்தால் தான் தெரிந்தது அந்த விருந்தாளி யாருனு
திருச்சிராப்பள்ளி: திருச்சியில் ஒரு விநோதமான உயிரினம் பீதியை கிளப்பி விட்டது.. இரவு நேரத்தில் நடமாடும் அந்த குட்டி உயிரினத்துக்கு பெரிய கண்கள், மெலிந்த உடல், நீண்ட கை, கால்களுடன் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த உயிரினத்தின் பெயர் தேவாங்கு... ஸ்லெண்டர் லோரிஸ் (Slender Loris) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இந்த உயிரினம், இரவில்தான் அதிகமாக சுறுசுறுப்பாக இருக்கும். இப்படியான அரியவகை உயிரினம் திருச்சி கேகே நகருக்குள் புகுந்து விட்டது.. அடுத்து என்ன நடந்தது?
ஸ்லெண்டர் லோரிஸ் என்று சொல்லப்படும இந்த உயிரினம், அரிதானது.. பெரும்பாலானோர் இதை பார்த்திருக்கவும் முடியாது.. இரவு நேரத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்த உயிரினம், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், சின்ன சின்ன பல்லிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறது.

தேவாங்குகளின் தலை முதல் உடல் வரையிலான நீளம் மொத்தமே சுமார் 18 முதல் 26 செ.மீ. வரை இருக்கும்.. எடை 85 முதல் 350 கிராம் வரை இருக்கும்.. இது சாதாரணமாக நம் வீடுகளுக்குள் வந்து போகும் உயிரினம் கிடையாது. காடுகள், புதர்கள், மரங்கள் இருக்கும் பகுதிகளில்தான் இதன் நடமாட்டம் அதிகம். அதனால்தான் இது பாதுகாக்க வேண்டிய முக்கியமான உயிரினமாக கருதப்படுகிறது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஸ்லெண்டர் லோரிஸ் Schedule I பாதுகாப்புப் பட்டியலில் உள்ளது.
திருச்சி கேகே நகர்
திருச்சி மாவட்டத்திலும் இந்த தேவாங்கு குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், மாவட்டத்தின் பல பகுதிகளில் தேவாங்கு இருப்பது பதிவாகியுள்ளதுடன், வாழ்விட மாற்றம் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் விரிவடைவது போன்றவை இதன் வாழ்விடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு அரிய உயிரினம்தான் இப்போது திருச்சியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தேவாங்கு ஒன்று இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது தேவாங்கு வீட்டுக்குள் இருந்ததும், சுமார் 6 மாத வயதுடையதாகவும் இருப்பதும் தெரியவந்தது. பொதுவாக அடர்ந்த வனப்பகுதி மற்றும் மூங்கில் போன்ற தாவரங்கள் நிறைந்த இடங்களில் காணப்படும் இந்த தேவாங்கு, குடியிருப்பு பகுதிக்குள் வந்திருந்தது வனத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்தது.
வனத்துறையினர் வேண்டுகோள்
வனத்துறையினர் அதை பத்திரமாக மீட்டுள்ளனர். அதன்பிறகு பாலக்கரை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது... அந்த உயிரினத்தின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு, அது வனப்பகுதிக்குள் மீண்டும் விடுவதற்கு ஏற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தேவாங்கு எம்.ஆர். பாளையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டடு, அங்கு அதை வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டுள்ளனர்... இப்படிப்பட்ட உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும்போது பொதுமக்கள் அவற்றை பிடிக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் தேவாங்கு
கடந்த வாரம்கூட, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் புதிய வீட்டுமனைகள் பிரிக்கப்பட்ட பகுதியில் மின்கம்பத்தின் கீழே காயமுற்ற நிலையில் தேவாங்கு கிடந்தது... இதையும் வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை தந்து, மலைப்பட்டி காப்புக்காடு பகுதியில் கொண்டுபோய் விட்டார்கள்..
அப்போது வனத்துறையினர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, தேவாங்குகள் மரங்களின் வழியே தான் இடம் பெயரும்... தொடர்ச்சியாக மரங்கள் இல்லாத இடங்களில் மட்டுமே தரை வழியே கடந்து செல்லும். இந்தியாவில் முதன்முதலாக தேவாங்கு சரணாலயம் அய்யலுார், கடவூர் பகுதிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது... இது நமது பகுதிக்கு கிடைத்த பெருமை..
இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க பொதுமக்களும் அக்கறை காட்ட வேண்டும். இரவு நேரத்தில் மலை சார்ந்த ரோடுகளில் வாகனங்களில் பயணிப்போர் குறைந்த வேகத்தில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
