இதைக் கூட உங்களால் செய்ய முடியாதா? அமைச்சர் மகன் அருண் நேரு விட்ட டோஸ்!
திருச்சி: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருணிடம், திமுக உறுப்பினர் அட்டைகளை திருப்பிக் கொடுக்க முயன்று புகார் சொன்னவர்கள் இப்போது புகழ் புராணம் பாடுகிறார்கள்.
அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அருண் நேரு கலந்துகொண்டார். அப்போது திருச்சி மாநகராட்சி 11வது வார்டுக்குட்பட்ட கீழக்கொல்லை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அருண் நேரு பங்கேற்ற போது, அங்கு வந்த திமுககாரரான ரவிச்சந்திரன் 50 திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைத்துக்கொண்டதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால் கொசுத் தொல்லையால் பாதிக்கப்படுவதாகவும் கூறியதோடு மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேயர் அன்பழகன் முன்னிலையிலேயே அமைச்சர் மகன் அருணிடம் அவர் குமுறினார். இதையடுத்து புகார் சொன்ன ரவிச்சந்திரனை அங்கிருந்து விரட்டுவதிலேயே நேருவின் ஆதரவாளர்கள் குறியாக இருந்தனர்.
ஆனால் அருண் நேருவோ தன்னிடம் குமுறிய நபரிடம் அலைபேசி எண் வாங்கி, அவரை தொடர்பு கொண்டு பேசி என்ன தான் பிரச்சனை என நேரடியாக விசாரித்தார். அப்போது திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய செயல்பாடு குறித்து ஒளிவு மறைவின்றி கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன். இதையடுத்து திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலருக்கு அமைச்சர் நேரு அலுவலகத்திலிருந்து டோஸ் விடப்பட்டிருக்கிறது.
அப்பா தான் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவரது ஊரிலேயே அதுவும் அவரது தொகுதியிலேயே இது போன்ற பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கலாமா என அருண் நேருவும் தனது பங்கிற்கு மேயர் அன்பழகனிடம் வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார். இதையடுத்து விழுந்து அடித்துக் கொண்டு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடகடவென கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் புகார் சொன்ன நபரான ரவிச்சந்திரனே, இந்த வாரம் அமைச்சர் நேரு மகனை பாராட்டி புகழ்ந்து பேட்டி கொடுத்திருக்கிறார். இதனை முன்கூட்டியே மாநகராட்சி நிர்வாகம் செய்திருந்தால் பிரச்சனைக்கே வேலையில்லை.












Click it and Unblock the Notifications