திருச்சியில் டைடல் பார்க்! திருநாவுக்கரசர் தான் காரணமாம்! திமுகவினரை சூடாக்கும் காங்கிரஸ் போஸ்டர்!
திருச்சி: திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில், அதற்கு காரணமே திருநாவுக்கரசர் தான் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திமுகவினரை கொதிக்க வைத்துள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது திருச்சிக்கு புதிய திட்டங்களை கொடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

பவர்ஃபுல் அமைச்சர்களான கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் திருச்சிக்காக கேட்டு வாங்கிய இந்த திட்டத்திற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தான் காரணம் என்பதை போல் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
இது திருச்சி மாநகர திமுகவினரை கொதிக்க வைத்துள்ளது. யார் கொண்டு வந்த திட்டத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது என திருநாவுக்கரசர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் திருச்சி திமுகவினர்.
இதேபோல் தான் மன்னார்புரம் செல்லும் வழியில் பாலம் அமைக்க ராணுவ இடம் தரப்பட்ட விவகாரத்திலும் திருநாவுக்கரசரின் முயற்சி தான் காரணம் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
அப்போது அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அதே போல் காங்கிரஸ் போஸ்டரை கண்டு 2 அமைச்சர்களின் ஆதரவாளர்களும் கடுப்பாகியுள்ளனர் .
திருநாவுக்கரசர் திருச்சி எம்.பி. என்றாலும் கூட திருச்சிக்கு எப்போதவது தான் வருகிறார் என்பதும் பெரும்பாலும் சென்னையிலேயே தங்குகிறார் என்பதும் ஏற்கனவே அவர் மீது உள்ள அதிருப்தியாகும்.
பட்ஜெட்டில் திருச்சி புறக்கணிக்கப்பட்டு விட்டதாக திருச்சிக்காரர்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் பேசி விவாதத்தை எழுப்பியதாலும், திருச்சி மாவட்டத்திற்கு 2 முக்கிய அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லையே என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதலும் திருச்சிக்கு ரூ.600 கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்காவை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் எனக் கூறுகிறார்கள் திமுகவினர்.
திருநாவுக்கரசர் தரப்பு ஒட்டியுள்ள இந்த பப்ளிசிட்டி போஸ்டர்களை அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஷும் ரசிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications