சுற்றுலா ஹாட் ஸ்பாட் ஆகும் திருச்சி - ‘மினி ஊட்டி’ பச்சைமலை மீது ‘கண்’வைத்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து, அதன் மூலம் வருவாயைப் பெருக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. அதன் அடையாளமாகத்தான், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சுற்றுலாவை மேம்படுத்த விரைவில் சுற்றுலாக் கொள்கையை அரசு வெளியிட உள்ளதாக நிதிநிலை அறிக்கை உரையின்போது தெரிவித்தார்.

மேலும், சுற்றுலாத்தலங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 75 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்திருந்தார்.

 Top in tourism, TN has more spots to explore beaches

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் உள்ள, அதிகம் அறியப்படாத இடங்களைக் கண்டறிந்து சூழல் சுற்றுலாவை வளர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பச்சை மலையைப் பெரிய அளவில் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருச்சி அருகே உள்ள பச்சை மலையானது இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் ஒரு மலைப் பிரதேசமாகும். சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் இந்த மலையானது பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த மலைப்பகுதியில் கிட்டத்தட்ட ஊட்டியின் தட்பவெப்பத்தை அப்படியே அனுபவிக்க முடியும்.

இம்மலையானது கடல் மட்டத்திலிருந்து கணக்கிட்டுச் சொன்னால் சுமார் 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைக்குப் போகும் பாதைகள் கூட இன்னும் ஒற்றையடிப் பாதையைப் போலவே பசுமை குறையாமல் உள்ளன.

இந்த மலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இயற்கை அழகு கெடாமல் மிகப் பாதுகாப்பாக இதுவரை இருந்துவருகிறது. பச்சை மலை ஒரே சமயத்தில் திருச்சி, பெரம்பலூர், சேலம் என 3 மாவட்டங்களை ஒருசேர இணைக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் மகாராணி என மக்கள் இதனை வர்ணிக்கிறார்கள்.

 Top in tourism, TN has more spots to explore beaches

இந்தப் பச்சை மலையின் சிறப்பு குறித்து 'வில்லேஜ் நேச்சுரல் ப்ளேஸ்' என்ற யூடியூபர் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். "இந்தப் பச்சை மலைக்கு வரவேண்டும் என்றால், முதலில் துறையூர் வரவேண்டும். அங்கிருந்து உப்பிலியாபுரம் வரவேண்டும். அப்படியே சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சை மலையை அடையலாம் என்கிறார் அவர்.

இந்தப் பச்சை மலையின் கீழாக உள்ள நிலங்களில் அதிகமாகச் சின்ன வெங்காயம் பயிரிடுகிறார்கள். வாழை, கரும்பு எனப் பலவகையான விவசாயம் நடைபெறுகிறது.

இந்த மலைப்பகுதியில் என்ன விவசாயம் நடைபெறுகிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இங்கு வந்தால் குறைந்த செலவில் ஊட்டியின் குளுகுளுப்பை பெறமுடியும். ஏறக்குறைய இது ஒரு மினி ஊட்டி. அதுதான் மிகமிக முக்கியம்.

சென்னையிலிருந்து இந்த மலையானது 360 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலைப்பகுதியின் பாதையின் இரண்டு பகுதிகளிலும் அடர்ந்த வனம்தான் உள்ளது. ஆகவே பச்சையம் போர்த்திய அழகான மலையாக இம்மலை உள்ளது" என்கிறார்.

 Top in tourism, TN has more spots to explore beaches

இந்தியாவில் சுற்றுலாத்துறையைப் பொருத்த அளவில் தமிழ்நாடு பெருவாரியான பங்களிப்பைச் செய்துவருகிறது. இந்தியச் சுற்றுலாத்துறை சார்பாகச் சமீபத்தில் வெளியான அறிக்கையோ, தேசிய அளவில் 21.31% பங்களிப்பைச் சுற்றுலாவை பொறுத்தளவில் தமிழ்நாடு செய்து வருகிறது என்கிறது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பொறுத்தளவில் தமிழ்நாடு பங்களிப்பு 21.86% ஆக உள்ளது. ஆகவே, மற்ற மாநிலங்களைவிட, இந்திய அளவில் மிகச் சிறப்பாகத் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாநிலங்கள் இடையே எடுக்கப்பட்ட, ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தின் 2022ஆம் ஆண்டு சர்வேயின் படி, உள்நாட்டுச் சுற்றுலா வருமானத்தில் 11.50 கோடி ஈட்டி தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது மிதமான மழைபொழிவு, அரிதாக நடைபெறும் நிலச்சரிவுகள், சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கும் கோடைக்கால தட்பவெப்பம், ஏற்கத்தக்க அளவிலான நிலவும் குளிர்காலம் என இயற்கையே வழங்கிய பல சிறப்புகளாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

இந்த அறிக்கையின்படி உலகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு எப்போதும் ஒரு நிலையான காலநிலையைக் கொண்டுள்ளது எனத் தெரியவருகிறது. ஆகவேதான் இந்தியாவின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது என்று இந்தியச் சுற்றுலாத்துறை அமைச்சரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல பாரம்பரிய கோயில்கள், மலை வாசஸ்தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், இயற்கைக் காட்சிகள் நிரம்பிய ஊர்கள் மற்றும் மிக அழகான கடற்கரைகள் எனக் கலவையான நிலப்பரப்புகள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன.

 Top in tourism, TN has more spots to explore beaches

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பட்டியலின்படி, மொத்தம் 15 வனவிலங்கு சரணாலயங்களும் 5 தேசிய பூங்காக்களும் உள்ளன. அதைத்தவிர்த்து 15 பறவைகள் சரணாலயங்களும் 5 புலிகள் காப்பகங்களும் இயங்கி வருகின்றன.

இந்தச் சிறப்புகளின் உச்சமாக உலகின் பாரம்பரிய தலங்கள் என்று யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியத் தொல்பொருள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 411 பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் இருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள மார்ச் 2023 செய்தி மடலின்படி வரும் ஆண்டுகளில் மேலும் பத்து சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த இடங்கள் தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியை ஒட்டி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆகவே, அதிகம் அறியப்படாத கோயில்கள், மலைவாச ஸ்தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள் எனப் பலவற்றையும் மேம்படுத்த ஒன்றிய அரசின் உதவியைத் தமிழகம் கோரியுள்ளது. அப்பகுதிகளுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து முன்னேற்ற முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக துறையூர் அடுத்து உள்ள பச்சைமலை இந்தப் பகுதிக்குள் வரும் ஒரு சுற்றுலாத் தலமாகும். இதனைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தினால் திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.00 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ளது.

இங்கே 54 வகையான பறவைகளும், 135 வகையான பட்டாம்பூச்சிகளும் உள்ளன. குறிஞ்சிமலை, சோபனபுரம், பச்சைமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள மண்மலையில் மான்களும் அதிகமாக இருக்கின்றன.

2013 இல் அறிவிக்கப்பட்ட பச்சைமலை சூழல் சுற்றுலாத் திட்டத்தின் மூலம், 2.30 கோடி ரூபாய் மதிப்பில், வியூவ் பாயிண்ட், சிறுவர் பூங்கா, மரத்தின் மேலான வீடுகள் எனப் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் வேல்முருகன் பேசுகையில், "சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்னும் அதிகரிக்கும். மேலும் கொடைக்கானல் மற்றும் நீலகிரிக்கு அடுத்ததாக இந்தப் பகுதி மக்களால் மிகவும் விரும்பப்படும் ஸ்தலமாக இருக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், பச்சை மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தித் தருவதில் அரசு நம்பிக்கையுடன் இருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், திருச்சி மாவட்ட நிர்வாகம் பச்சை மலை சூழல் சுற்றுலா திட்டம் குறித்து ஆராய்ந்து அரசுக்கு கருத்துரை அனுப்பியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் சமீபத்தில் வருவாய், வனம், பொதுப்பணித்துறை, நீர்வளம், சுற்றுலாத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய அலுவலர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

அதில் இது பற்றிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களை ஒரு கோப்பாக அரசின் பார்வைக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+