கர்ப்பிணி ஊழியரை தாக்கிய அதிமுகவினர்.. திருச்சி 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல்
திருச்சி: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் பயணித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வேலூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதேபோல திருச்சி கூட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருச்சி எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளரான கர்ப்பிணி பெண்ணை தாக்கிய புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலை அறிவிக்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்கிற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் திமுக மீதான விமர்சனம், கூட்டணி குறித்த விளக்கம் ஆகியவற்றை பேசி வருகிறார்.

108 ஆம்புலன்ஸ் சர்ச்சை
அதிமுக ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் திட்டங்கள் குறித்து வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மறுபக்கம் அவரின் கூட்டத்தில் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
அதிமுகவினர் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக ஆள் இல்லா ஆம்புலன்ஸை அனுப்பி தொந்தரவு செய்வதாக அவர் புகார் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கடுமையாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.
தாக்குதல்.. காயம்
அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸையும், ஊழியர்களையும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துறையூரில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு வந்த ஒருவர் எம்எஸ்கே மண்டபம் அருகே மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்று 108க்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளனர். அவரை காப்பாற்றுவதற்காக சென்றேன். கூட்டத்தில் இருந்தவர்கள் எங்களை விடாமல், எதற்காக வந்தீர்கள். யார் போன் செய்தார்கள். எங்கள் கூட்டத்தை கலைக்க வந்துள்ளீர்கள் என்று சொல்லி தாக்கினார்கள்.
கர்ப்பிணி பெண் தாக்குதல்
வண்டியை தாக்கி சேதாரம் செய்து, என்னையும் தாக்கிவிட்டனர். என்னுடன் தொழில்நுட்ப உதவியாளரையும் தாக்கினர். இதில் எனக்கு நெஞ்சுவலி, கைவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன். எங்கள் தொழில்நுட்ப உதவியாளர் பெண். அவர் அணிந்திருந்த சால், கோர்ட் ஆகியவற்றை பிடித்து இழுத்துள்ளனர். அவர் கர்ப்பமாக உள்ளார்.
இவர்கள் தாக்கியதில் அவருக்கு கழுத்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காப்பாற்ற சென்ற எங்களுக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களுக்கு என்ன நிலை என்று தெரியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications