மத்திய அரசை பார்த்து பயப்படும் அதிகாரிகள்.. கேஎன் நேருவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.. சொன்னது என்ன?
திருச்சி: தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் கூறினார். மேலும் மத்திய அரசை பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என கேஎன் நேரு கூறியதற்கு மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலடி கொடுத்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் திட்ட பணிகள் எப்படி உள்ளது? என்பது பற்றி மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் துறைசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தமிழ்நாடு வந்தார். திருச்சியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்பிறகு சுபாஷ் சர்க்கார் கூறியதாவது:

அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை
திருச்சி மாவட்டம் என்ஐடி, கேந்திர வித்யாலயா மற்றும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்தேன். தமிழக பள்ளிகள், குறிப்பாக, அரசுப் பள்ளிகள் தேசிய கல்வி கொள்கை 2020ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. அதனை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருவது தமிழக பள்ளிகளின் செயல்திறன் குறித்த எங்களின் கவனிப்பிலிருந்து தெளிவாகிறது.

சிறந்த வெற்றி
மேலும், மற்ற மாநிலங்களிலும் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், விளையாட்டு போன்ற பல நல்ல விஷயங்களை தேசிய கல்வி கொள்கை கொண்டுள்ளது. தமிழகத்தில் பாஜக சிறப்பாக பணியாற்றி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த வெற்றியை பாஜக பெறும் என கூறினார்.

நவோதயா பள்ளி
அரசின் கொள்கையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவோதயா பள்ளி இருக்க வேண்டும், ஆனால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லை. இது குறித்து பொது மக்கள் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். திருச்சியில் மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வர அரசு நிலம் ஒதுக்கினால் பல்கலைக்கழகம் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

கேஎன் நேரு குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இந்த வேளையில் தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்கள் என்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சுபாஷ் சர்க்கார் மறுத்ததோடு, ‛‛எந்த அதிகாரிகளும் மத்திய அரசை கண்டு பயப்படுவதில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications