தவெக என் தம்பி கட்சி.. விஜய்யை தட்டிக் கொடுப்பேனே தவிர.. திடீரென யூடர்ன் போட்ட சீமான்!
திருச்சி: திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளும் எதிரி கட்சிகள் என்று கூறிய சீமான், தவெக தன்னுடைய தம்பி கட்சி என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே விஜய்யை கடுமையாக சாடிய சீமான், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திடீரென தம்பி கட்சி என்று பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் SIR பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR பணிகள், டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் இறந்தவர்கள் பட்டியலில் சுமார் 27 லட்சம் பேரும், இரட்டை வாக்குகளோடு சுமார் 3 லட்சம் பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 66 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் இருக்கின்றனர். இதனால் தமிழக அரசியலே மொத்தமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், SIR மூலமாக ஒரு கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது.
இது எப்படி திருத்தம் என்று சொல்ல முடியும். குறுகிய காலத்தில் விடுபட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து எப்படி மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியும். எப்படியும் பிப்ரவரியில் தேர்தல் அறிவித்துவிடுவார்கள். ஏற்கனவே டிசம்பர் மாதமும் முடிந்துவிட்டது, மக்களின் அடிப்படை உரிமையே வாக்கு மட்டும்தான். அதுவே கேள்விக்குறியாகி இருக்கிறது.
பீகார் 81 லட்சம் வாக்குகள் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவில் நீக்கப்பட்டது. தற்போது பாஜகவுக்கு எதிரான 40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை வாக்குகளை மட்டுமே நீக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் எப்படி இவ்வளவு வாக்குகளை சேர்க்க முடியும். வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் போய், ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் காலம் வந்துவிட்டது.
இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அதேபோல் விஜய் களத்திற்கே இன்னும் வரவில்லை. களத்திற்கே வராதவர் களத்தில் இருப்பவர்களை பற்றி பேசுகிறார். அதனை சிரித்துவிட்டு கடந்து போய்விடவும். திமுக தீயசக்தி என்று விஜய் கூறினால், எதனால் அது தீயசக்தி என்பதையும் விளக்க வேண்டும். திமுக தீயசக்தி என்பது இப்போதுதான் விஜய்க்கு தெரிந்திருக்கிறது.
கொள்கை பேசி யார் வாக்கு கேட்கிறார்கள்.. விஜய்க்கு ஒரேயொரு வில்லன் தான்.. எனக்கு 4 எதிரிகள் இருக்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று 4 கட்சிகளும் எதிரிகள்.. தவெக என்னுடைய தம்பி கட்சி.. அதனால் தட்டிதான் கொடுக்க வேண்டும். தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை.. எங்களுக்குள் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications