காஷ்மீர் கொடூரம்: நாட்டை காப்பாற்ற சென்ற சிவச்சந்திரன், வீட்டை காப்பாற்றவில்லையே... கதறும் தந்தை
திருச்சி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகிய இருவரும் வீர மரணம் அடைந்தனர்.
இருவரது குடும்பங்களுமே வறுமை பின்னணி கொண்டவை. சிவச்சந்திரனின் சொந்த ஊர், கார்குடி என்ற கிராமம். சிவசந்திரனின் சம்பளப் பணம் மட்டுமே அவரது குடும்பத்திற்கு ஆதாரம்.
இவரது தந்தை சின்னையன் கூலித் தொழிலாளி. தாய் பெயர் சிங்காரவள்ளி.

குடும்பத்தின் ஆதாரம்
ஜெயந்தி என்ற அக்காவிற்கு திருமணமாகிவிட்ட நிலையில், காது கேட்கும் திறன் இல்லாத இவரது தங்கை ஜெயச்சந்திராவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவச்சந்திரனின் தம்பி செல்வச்சந்திரன் என்பவர் கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் சிவச்சந்திரனும் தற்போது வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜனவரி மாதம்
2010ம் ஆண்டு சிஆர்பிஎப் பணியில் சேர்ந்த சிவச்சந்திரனுக்கு 2014ம் ஆண்டு காந்திமதியுடன் திருமணமானது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சிவச்சந்திரன். சுமார் ஒரு மாதம், குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருந்துள்ளார்.

ஒரு வாரத்தில் சோகம்
பிப்ரவரி 9ம் தேதி பணியில் சேருவதற்காக சொந்த ஊரில் இருந்து கிளம்பியுள்ளார். இந்த நிலையல், ஒரு வாரத்திற்குள் சிவச்சந்திரன் மரண செய்தி அவரது குடும்பத்திற்கு சென்றுள்ளது. இதைக் கேட்ட அவரது மனைவி காந்திமதி, சிவச்சந்திரன் ஊருக்கு வரும்போது பயன்படுத்தும் பைக்கை கட்டிப்பிடித்து, அழுதபடி உள்ளார்.

அரசு வேலை கொடுங்க
இதுபற்றி சின்னையன் கூறுகையில், எவ்வளவு பணம் கொடுத்தாலும், சிவச்சந்திரன் இழப்புக்கு ஈடாகாது. எனக்கும் வயதாகிவிட்டது. மருமகள் காந்திமதி நர்ஸ் படிப்பு முடித்துள்ளார். அவர் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை கொடுத்தால், சிவச்சந்திரனின் குடும்பம் பிழைத்துக்கொள்ளும் என்று உருக்கமாக அரசுக்கு கோரிக்கைவிடுத்தார். நாட்டை காப்பாற்ற சென்ற எனது மகனால் வீட்டை காப்பாற்ற முடியவில்லையே.. என சின்னையன் கதறும் அழுகை, கார்குடி கிராமம் முழுக்க சோகமாய் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications