திருச்சி தொகுதியில் “தீப்பெட்டி” என்னாகும்? அடித்து மேலே வரும் அதிமுக.. தந்தி டிவி கணிப்பு ரிசல்ட்!
திருச்சி: தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள திருச்சி லோக்சபா தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? துரை வைகோ போட்டியிடும் தொகுதியில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்பு முனையாக இருந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த திருச்சியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக, தங்களுக்கு கிடைத்த ஒரு தொகுதியில் வெற்றியை உறுதி செய்ய கடுமையாக போராடுகிறது. துரை வைகோ, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதால், சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேர்தல் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடும் என்கிறது இந்தக் கணிப்பு. திருச்சி தொகுதியை பொறுத்தவரை மதிமுகவுக்கு கடும் குடைச்சலாக இருப்பது அதிமுக தான்.
திருச்சியில் மதிமுக 37 - 43% வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 35 - 41% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் வெறும் 2 சதவீதம் தான். இதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான் திருச்சியில் நிலவுகிறது. அதிமுகவுக்கு களம் சாதகமானால், தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெறும் தொகுதியாக திருச்சி இருக்கக்கூடும்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி லோக்சபா தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் இந்த முறை பாஜக கூட்டணி காரணமாக தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது. ஆனால், தந்தி டிவி கருத்துக்கணிப்பின்படி அமமுக, 14 - 20 வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, திருச்சியில் 3வது இடம் பிடிக்கவே வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சி 4 -7 % வாக்குகளை பெறக்கூடும் என தந்தி டிவி சர்வே தெரிவிக்கிறது. திமுக கூட்டணி - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் திருச்சியில், துரை வைகோ வெற்றியை பெறுவாரா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications