விஜய் கட்சியுடன் கூட்டணி? வந்து விழுந்த கேள்வி! ஒரே வரியில் விளக்கம் தந்த சீமான்! பிளான் இதுதானாம்
திருச்சி: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்குமோ என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும், திருச்சி எஸ்பி வருண்குமார் தனது ஐபிஎஸ் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான் கட்சி விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து கூறினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சீமான்: இதற்கிடையே திருச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகளை நாங்கள் எதிர்த்துப் போட்டியிடுகிறோம். அவர்களிடம் இருப்பது போலப் பணபலம், ஊடக பலம் எங்களிடம் இல்லை. இதனால் படை பலத்தைப் பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் 100 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என என்று இப்போது நியமித்து வருகிறோம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அதை ஏற்க முடியாது. அண்ணாமலை போல ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிக்குத் தலைவராக வரவில்லை எடப்பாடி பழனிசாமி. அவர் அதிமுக அடிப்படை உறுப்பினராக இருந்து, படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியை விட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர்.. தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை கொடுத்தவர்.
விஜய் கட்சியுடன் கூட்டணி? : தமிழ்நாட்டில் 2026 சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் வழக்கம் போலத் தனித்துத் தான் போட்டியிடும். ஏற்கனவே சுமார் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தயார் செய்துவிட்டோம். வரும் காலத்தில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தயார் செய்துவிடுவோம். அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்பதெல்லாம் வெறும் புரளி மட்டுமே" என்றார்.
வருண்குமார்: தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்துப் பேசிய சீமான், "திருச்சி மாவட்ட எஸ்பியாக வருண்குமார் இருக்கிறார். அதன் அருகில் உள்ள மாவட்டமான புதுக்கோட்டையிலேயே அவரது மனைவி வந்திதா பாண்டே பணியில் சேர்ந்தது எப்படி? வருண்குமார் போலீசாரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தும் நபராக இருக்கிறார். வருண்குமார் தனது ஐபிஎஸ் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அவர் திமுகவுக்கு வேலை பார்க்க நினைத்தால் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக ஐடி விங்கில் சேரட்டும்" என்றார்.
தொடர்ந்து மற்ற விஷயங்கள் குறித்துப் பேசிய சீமான், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகத் தமிழரான சைலேந்திரபாபுவை இரண்டு முறை பரிந்துரை செய்த போது ஆளுநர் அதை நிராகரித்தார். ஆனால், பிரபாகரன் நியமனத்தை மட்டும் ஏற்றுக்கொண்டாரே ஏன்? ஏனென்றால் அவர் கோவையில் அண்ணாமலைக்காக தேர்தலில் வேலை செய்தவர். அதற்காகவே இந்த பதவியை வழங்கியுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழர்கள் யாருக்கும் அரசு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுவிடும்.
இடைக்கால முதல்வர்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இப்போது அமெரிக்கா செல்கிறார். அவருக்குப் பதிலாக அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் மூத்த அரசியல்வாதி துரைமுருகனை இடைக்கால முதல்வராக அறிவிக்கவேண்டும்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications