திருச்சி காவலர் குடியிருப்பில் பரபரப்பு.. ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டி கொலை.. 5 பேர் கும்பல் கைது
திருச்சி: திருச்சி பீமாநகர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை 5 பேர் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். திருச்சி காவலர் குடியிருப்பில் வைத்து இந்த கும்பல் இளைஞரை வெட்டி கொலை செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

திருச்சி பீமாநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (வயது 24). இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் இன்று காலையிலும் அவர் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்சிங்பேடை பகுதி வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
காவலர் குடியிருப்புக்குள் ஓடிய இளைஞர்
அப்போது திடீரென எதிரே இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தாமரைச்செல்வன் வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். ஏன் எதற்கு என தெரியாமல் திகைத்த தாமரைச்செல்வன் மீது ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதினார். இதில் நிலைகொள்ள முடியாமல் தாமரைச்செல்வன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் கீழே விழுந்த இளைஞர் மீது கும்பல் தாக்குதலை நடத்தியது.
அரிவாள், கத்தி, கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். எனினும் இளைஞர் அவர்கள் பிடியில் இருந்து நழுவி உயிரை காப்பாற்ற ஓடினார். எனினும் அந்த கும்பல் பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். அந்த பகுதியில் தான் திருச்சி மாசிங்பேட்டை காவலர் குடியிருப்பு உள்ளது. இதனால் அங்கு சென்றால் உயிர்பிழைத்துவிடலாம் என சென்றுள்ளார். எனினும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்றனர்.
கிச்சனில் வைத்து வெட்டி கொன்றனர்
இதில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் நேற்று நைட் ஷிப்ட் முடித்துவிட்டு இன்று காலையில் தான் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவர்களை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது தாமரைச்செல்வன் காவலர் செல்வராஜ் வீட்டின் கிச்சன் பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் பின்னாலேயே துரத்தி சென்ற கும்பல் கிச்சனில் வைத்தே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க இளைஞர் உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் உள்பட சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
5 பேர் கைது
இதையடுத்து சில மணி நேரங்களில் தாமரைச்செல்வனை அரிவாளால் வெட்டி கொலை செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முன்விரோதம் காரணமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்பவருக்கும் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாமரைச்செல்வன் சதீஷை அடித்து தாக்கியுள்ளார். இதில் முன்விரோதம் அடைந்த சதீஷ் தான் தற்போது கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சதீஷ், பிரகாகரன், நந்து, கணேசன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications