எமலோகத்தின் வாசற்படி வரை சென்று திரும்பிய சிறுவன்! திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது விபரீதம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் நீராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் திடீரென கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உயிருடன் மீட்டு வந்தனர்.
அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில் கடந்த புதன்கிழமை ஆடி அமாவாசை என்பதால் கடல் அலையின் சீற்றம் அதிக அளவில் இருந்து வருகிறது.

இதன் வெளிப்பாடாக காலை நேரங்களில் கடல் உள்வாங்கியும் பகல் நேரங்களில் அதிகமான சீற்றத்துடனும் காற்றின் வேகத்துடனும் காணப்பட்டு வருகிறது.
இதனால் கடலில் நீராடக் கூடிய பக்தர்களை மிகவும் கவனமான முறையில் நீராட வலியுறுத்தி திருக்கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாத்தூர் ஊரை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சரண் (14) மற்றும் மூன்று சிறுவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சரண், கடல் அலையால் அதிகமான தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.
இதனை பார்த்த திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அங்கு வந்தனர். அப்போது சிவராஜா என்ற திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர் கடலுக்குள் இறங்கி ஆழமான பகுதியில் இருந்த சிறுவனை பாதுகாப்பான முறையில் தோள் கொடுத்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
பத்து நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனை மீட்டனர். கடலில் நீராடிய சிறுவனுக்கும் காப்பாற்ற சென்ற பாதுகாப்பு பணியாளர் சிவராஜாக்கும் ஆங்காங்கே உடல்களில் காயங்களும் ஏற்பட்டு இருந்தது.
மிகவும் கவனமான முறையில் சிறுவனை உயிருடன் மீட்டு வந்த திருக்கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு அங்கு கூடியிருந்த பல பக்தர்கள் நன்றி தெரிவித்து வாழ்த்தினர்.
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடற்கரைகள் ஆக்ரோஷமாக காட்சியளிக்கும். அலைகள் எல்லாம் பெரிது பெரிதாக எழும்பும். இதனால்தான் அந்த நாட்களில் கடலில் குளிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுகிறார்கள்.
அதிலும் திருச்செந்தூர் கடற்கரையில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்பதால் அங்கிருக்கும் பணியாளர்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருவார்கள். அது போல் சில நேரங்களில் ஜெல்லி மீன்களும் கரைக்கு வரும். இவை உடலில் பட்டால் ஒவ்வாமை ஏற்படும். அந்த சமயங்களிலும் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்துவதுண்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரிநா கடற்கரையில் கூட உக்ரைன் நாட்டு பெண் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டார்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் அனோஷ்கா (24). இவர் சுற்றுலா பயணியாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர் சென்னைக்கும் வந்தார். அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் மெரினா கடற்கரைக்கு நேற்று மாலை 4 மணிக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதை கண்ட மற்றவர்கள் உடனடியாக மெரினாவில் செயல்படும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு காவலர்கள் முத்து சரவணன், பவினேஷ், விக்னேஷ் ஆகியோர் கடலுக்குள் சென்று அந்த பெண்ணை மீட்டனர். இதையடுத்து அந்த பெண் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
