அதிமுக ஹாட்ரிக் வெற்றி உறுதி.. கையில் இருக்கு "பிரம்மாஸ்திரம்.." உடைத்து சொல்லும் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் திட்டம் இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் எஸ்பி சண்முகநாதன், கோவில்பட்டி தொகுதி கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் தொகுதி சின்னப்பன், ஓட்டப்பிடாரம் தொகுதி மோகன், திருச்செந்தூர் தொகுதி ராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆளுயர மாலை அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி மகத்தான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எழுச்சி வரவேற்பு
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆசியோடு மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் முதல் முதலாக அறிவித்த கட்சி அதிமுக. அன்றைக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட எழுச்சியான வரவேற்பு பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அம்மாவின் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பித்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அம்மாவின் நல்லாட்சி அமைவதற்கு உறுதியாக தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் இருக்கும்.

ஆட்சி தொடர வேண்டும்
தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி தலைமை சொல்லக் கூடிய நாளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
மக்கள் நம்பிக்கையை பெற்று ஆட்சியை தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. மீண்டும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேர்தலை சந்திக்கிறோம்.

ஹாட்ரிக் வெற்றி
தூத்துக்குடி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவது குறித்த முடிவு ஒன்றும் எட்டப்படவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட விடுபட்ட சில தொகுதிகளுக்கு கட்சி தலைமை முடிவெடுத்து வேட்பாளர் அறிவிப்பார்கள். எம்ஜிஆர், ஜெ. தெய்வீக ஆசியோடு மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்று பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைய உள்ளது.

கூடுதல் பலம்
ஏற்கனவே அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் விரும்புகிற அம்சங்கள் திட்டங்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். அது அதிமுகவின் வெற்றிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆம்.. அதிமுக தனது தேர்தல் அறிக்கையை மிகப் பெரிதாக நம்பிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் மக்களின் மனம் கவரும் அறிவிப்புகள் வெளியாக உள்ளதாம்.

அதிரடி தேர்தல் அறிக்கை
அதிமுக ஓரிரு நாட்களில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக, குடும்பத்திற்கு, ஆறு சிலிண்டர்கள் இலவசம் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகும். வேலை வாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications