இவ்வளவும் பண்ணிட்டு தியேட்டரில் படம் பார்க்குறாங்க.. மனசாட்சி இல்லையா! அருணாச்சலத்தின் தாய் கண்ணீர்
தூத்துக்குடி: லாக் அப் மரணம் நடந்திருக்கும் போது கூட அமைச்சர்கள் திரையரங்குகளில் விசிலடித்து கொண்டு படம் பார்ப்பது நியாயமா என்று உயிரிழந்த அருணாச்சலத்தின் தாய் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவினருக்கு மனசாட்சி இல்லையா என்ற கேள்வி எழுப்பிய அவர், அவர் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்தாலும் இப்படிதான் விசிலடிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் இளைஞர் அருணாச்சலம். இவர் சில நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து விசாரணையின் போது அருணாச்சலம் மயங்கியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினரின் கடுமையான தாக்குதலால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே காவல் நிலையத்தில் அருணாச்சலத்தை போலீசார் தலையில் தாக்கியதாக பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவியது.
இதனிடையே லாக் அப் மரணம் தொடர்பாக தவெக சார்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சி அமைத்த 5 வாரங்களில் 4 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு பாஜகவினர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இதன்பின் அருணாச்சலத்தின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவ்வளவும் பண்ணிட்டு ஜாலியாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்துட்டு இருக்காங்க.. விசில் அடிச்சு படம் பார்த்துட்டு இருக்காங்க.. இப்படியெல்லாம் செய்யலாமா.. மனசாட்சி இல்லையா.. அவர்களின் உறவினர்கள் இறந்து போனால், இப்படிதான் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பார்களா? என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், கடந்த காலங்களில் இதுபோன்ற லாக் அப் மரணங்கள் ஆட்சியின் கடைசி காலத்தின் தான் நடந்தது. ஆனால் தவெக ஆட்சியில் முதல் சில மாதங்களிலேயே நடக்கிறது. திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அரசு நிர்வாகத்தை விட்டு படம் பார்க்க சென்றுவிட்டார்கள்.. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
