புன்னக்காயலில் 14 ஜோடிகளுக்கு தாலி கட்டியாச்சு.. ரூ.5 லட்சம் சீர்வரிசை தந்தாச்சு! அங்கேதான் ஹைலைட்டே

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே 14 ஏழை ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மணமகளுக்கும் ஒரு சவரன் தங்கத் தாலியும், குடும்பம் நடத்த தேவையான 36 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர் புன்னக்காயல் கிராம மக்கள்.. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்திலும் வெளியாகி வியப்பை கூட்டி வருகின்றன...!!!

தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில், ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு உதவும் நடைமுறை நீண்ட காலமாகவே வழக்கமாக இருந்து வருகிறது.

Punnakayal Wedding News Seer Varisai

புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி

அந்த ஊரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஒன்றாக சேர்ந்து, "புன்னக்காயல் ஊர் நலக் கமிட்டி" என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.. இந்த கமிட்டி மூலம் ஏராளமான சமூக சேவைகளும், ஏழை மக்களுக்கான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக திருமணமாகாமல் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கும் இலவசமாக திருமணம் செய்து வைப்பதை ஊர் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இந்த வருடமும் ஏழ்மை நிலையில் இருந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திருமணத்துக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

14 வீட்டு மணமக்களின் உறவுகள்

இதற்காக மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசினார்கள்.. பெரியவர்களின் சம்மதத்தையும் பெற்றார்கள்.. பிறகு ஜரூராக திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின.. புன்னக்காயல் கிராமமே களைகட்டியது.. 14 வீட்டு மணமக்களின் உறவுகள் அத்தனை பேரும் புன்னக்காயலில் குவிந்தனர்.. இறுதியில், புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா தேவாலயத்தில் 14 ஜோடிகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது..

திருமணத்தையொட்டி அதிகாலையிலேயே 14 ஜோடிகளும் தங்கள் குடும்பத்தினருடன் சர்ச்சுக்கு வந்தார்கள்.. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன் பிறகு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து மணமகன்கள் மணமகள்களுக்கு தாலி கட்டினர். ஒரே நேரத்தில் 14 மணமகள்களின் கழுத்திலும் தாலி ஏறியது.. பிறகு ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பங்குத்தந்தைகள் புதிய தம்பதிகளை ஆசீர்வதித்தனர்.

அசத்தல் சீர்வரிசை

திருமணம் முடிந்ததும், புதிய வாழ்க்கையை தொடங்கும் தம்பதிகளுக்கு ஊர் நலக் கமிட்டி சார்பில் தங்கத் தாலியுடன் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மணமகளுக்கும் ஒரு சவரன் தங்கத் தாலி வழங்கப்பட்டது. அத்துடன் குடும்பம் நடத்த தேவையான பீரோ, கட்டில், மெத்தை, மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட 36 வகையான பொருட்களும் வழங்கப்பட்டன.

அதாவது ஒரு தம்பதிக்கு சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 14 புதுமணத் தம்பதிகளையும் வாழ்த்தினார்கள்..

200 வருட பாரம்பரியம்

இதுகுறித்து முன்னாள் ஊர்நலக் கமிட்டி தலைவர் சந்திரபோஸ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, புன்னக்காயல் பகுதியில் சுமார் 200 வருடங்களாகவே இந்த பாரம்பரிய கூட்டுத் திருமண நிகழ்வு நடைபெற்று வருகிறது.. ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களை தேர்வு செய்து, அவர்களின் திருமணத்தை ஊர் பொதுமக்களும் ஊர்நலக் கமிட்டியினரும் இணைந்து நடத்தி வருகிறார்கள்.

அப்படித்தான் இந்த ஆண்டும் 14 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மணமகளுக்கும் ஒரு சவரன் தங்கத் தாலியும், குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

நம்பிக்கை தந்த புன்னக்காயல் கிராமம்

பொதுவாக, ஒரு குடும்பத்தின் கல்யாண செலவை இன்னொரு குடும்பம் ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம்தான்... ஆனால், புன்னக்காயலில் 14 குடும்பங்களின் திருமணப் பொறுப்பையே ஒரு கிராமமே சேர்ந்து ஏற்றிருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்..

திருமணம் முடிந்ததும் கையில் கொடுக்கப்பட்ட சீர்வரிசைப் பொருட்கள் வெறும் பொருட்கள் மட்டுமல்ல.. 14 குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையை தொடங்க ஒரு நம்பிக்கையும் சேர்த்தே கொடுத்திருக்கிறார்கள். "உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ஒதுங்காமல்.. "நாங்களும் உங்களோடு இருக்கிறோம்" என்று சொல்லியிருக்கிறது புன்னக்காயல்.

திருமண மேடையில் 14 ஜோடிகள் கை கோர்த்த அந்த தருணம் அழகானதுதான்.. ஆனால், அந்த 14 குடும்பங்களின் வாழ்க்கைக்கே ஒரு கிராமமே கை கொடுத்திருப்பதுதான் இந்த திருமணத்தின் உண்மையான நெகிழ்ச்சியான விஷயம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+