பிஎம்டபிள்யூ கார் உள்பட ரூ.47.32 கோடிக்கு சொத்து வைத்துள்ள கனிமொழி.. கடனும் இருக்காமே!
தூத்துக்குடி: வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சொத்து விபரங்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி எம்பியாக திமுகவின் கனிமொழி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி சிந்தலக்கரையில் முதல்வர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை தூத்துக்குடி எம்பி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். இவரது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி தகுதி: அதில் கனிமொழி எம்பியின் கல்வி தகுதி, சொத்து விபரம், கடன், உள்பட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்விபரம் வருமாறு: திமுக எம்பி கனிமொழி வணிகப் பொருளியல் படிப்பை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்துள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கு: கனிமொழி எம்பி மீது 2 குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2ஜி அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பெற்றதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு மற்றும் 2ஜி அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட வழக்கு என்று 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு: மேலும் கையில் ரூ.13,500 உள்ளது. பிஎம்டபிள்யூ கார், ஹுண்டாய் அல்கசார் கார், டொயோட்டா என 3 கார்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 ஆகும். மேலும் 704.28 கிராம் தங்கம், 12.03 காரட் வைர நகைகள் உள்ளன. மேலும் வங்கிகளில் வைப்புத்தொகை, பிற நிறுவனங்களின் முதலீடுகளை குறிப்பிட்டுள்ள கனிமொழி தன்னிடம் ரூ.28 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் வீடு, வணிக கட்டங்கள் உள்ளதாகவும், சொந்த நிலம் என தன்னிடம் ரூ.18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். மொத்தமாக பார்த்தால் ரூ.47 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரத்து 770 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.
கடன்: இதுதவிர கனிமொழி எம்பிக்கு ரூ.60.60 லட்சம் கடன் உள்ளது. தற்போதைய சூழலில் கனிமொழி எம்பிக்கு வாடகை, வங்கியிலிருந்து பெறப்படும் வட்டி, எம்பி ஊதியம் ஆகியவற்றின் மூலம் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications