Jana Nayagan release | தூத்துக்குடி கோவில்பட்டியில் ஜனநாயகன் பட டிக்கெட் 1000 ரூபாய்.. பறந்த புகார்
தூத்துக்குடி: ஜனநாயகன் திரைப்படம் ஒரு டிக்கெட் ரூ.1000வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இது தொடர்பாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வெளியிட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் எனில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் கடைசி படம் என்ற அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்சன் தயாரித்துள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாக பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

இது ஒருபுறம் எனில் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தில் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளை நீக்கினால் படத்திற்கு யுஏ சான்றிதழ் தருவதாகவும் சென்சார் போர்டு கூறியிருக்கிறது.
இது ஒருபுறம் எனில் மத உணர்வு விவகாரத்தில் மற்றவர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறுதணிக்கை செய்ய சென்சார் போர்டு முடிவு செய்திருக்கிறது. குறிப்பிட்ட நாளில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் சென்சார் போர்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.. இந்த சிக்கல்கள் எல்லாம் இன்றைய நீதிமன்ற விசாரணையில் தான் தெரிய வந்துள்ளது. படத்தை 10ம் தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு நாளை மீணடும் விசாரணைக்கு வர உள்ளது.
இது ஒருபுறம் எனில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மூன்று பிரபல திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு கட்டணமாக ஒரு டிக்கெட் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் ரசிகர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் 600,800,1000 என ஒவ்வொரு தியேட்டர்க்கும் ஒரு கட்டணம் என்று அந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூறும் தகவல் உள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications