ஒரு சைக்கிள் விலை ரூ.14 லட்சம்! முப்பிலிவெட்டி டூ இஸ்ரேல்! ஏழைப்பெண் மீது கனிமொழி காட்டிய கரிசனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் வீராங்கனை ஒருவருக்கு ரூ.14 லட்சம் மதிப்புடைய ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
என்னாது ஒரு சைக்கிள் விலை ரூ.14 லட்சமா என ஆச்சரியப்படுகிறீர்களா, ஆம் அதுமட்டுமல்லாமல் இந்த சைக்கிளை இந்தியாவிலேயே இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை என்பது கூடுதல் தகவலாகும்.
அப்படி என்ன ஸ்பெஷல் சைக்கிள் அது, அதை வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் கனிமொழிக்கு என்ன வந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

முப்பிலிவெட்டி கிராமம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியில் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து, வெண்கலப்பாதகத்தை வென்ற ஸ்ரீமதி, பதக்கத்தைக் கனிமொழி எம்.பி.யிடம் காண்பித்து மகிழ்ந்தார், அவருக்கு கனிமொழி இன்று 14 லட்ச ரூபாய் மதிப்புடைய சைக்கிளை பரிசளித்தார்.

நாட்டில் முதல் முறை
இந்தியாவிலேயே இந்த சைக்கிளை பயன்படுத்தப்போகும் முதன் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும்,சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார். தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான ஸ்ரீமதி, மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கனிமொழியிடம் கோரிக்கை
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தினால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம் தனக்கு சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார்.

ஜூனியர் சைக்கிள் போட்டி
இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் ஸ்ரீமதி.

இஸ்ரேலில் உலக சாம்பியன்ஷிப்
இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் "உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்" போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்தியேக சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இன்று தனது தூத்துக்குடி அலுவலகத்தில் சைக்கிள் வீராங்கணைக்கு அவர் கோரிக்கை விடுத்த சைக்கிளை கனிமொழி நேரில் அழைத்து பரிசளித்தார்.












Click it and Unblock the Notifications