நீ கேசரி சாப்பிடுவியா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா.. குழந்தைகளோடு குழந்தையாக மாறிய கனிமொழி எம்.பி.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி., தனது கைப்படவே ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
அப்போது நீ கேசரி சாப்பிடுவியா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா.. எனக் கேட்டு கேட்டு ஒவ்வொரு மாணவருக்கும் உணவு பரிமாறினார்.
மேலும் சாப்பாட்டை வேஸ்ட் செய்யக்கூடாது என்றும் காய்கறிகளை ஒதுக்கி வைக்காமல் சாப்பிட்டால் தான் சத்து கிடைக்கும் எனவும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தாய்மைக்கே உரிய அக்கறையோடு எடுத்துக் கூறினார்.

காலை உணவுத் திட்டம்
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையில் சீக்கிரமே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு முதல்வருக்கு கிடைத்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என கடந்த மே மாதன் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

நிதி ஒதுக்கீடு
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அதனை அண்ணா பிறந்தநாளான நேற்று மதுரையில் தொடங்கியும் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் 1,545 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.

உணவு பரிமாறினார்
அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு காய்கறிகள் போட்டு சமைக்கப்பட்ட கிச்சடியையும், முதல் நாள் என்பதால் இனிப்பு பண்டமான கேசரியையும் அவர் தனது கைப்பட பரிமாறினார். அப்போது ''நீ கேசரி சாப்பிடுவியா.. கிச்சடி நல்லாயிருக்கிறதா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..'' என ஒவ்வொரு மாணவ, மாணவியிடமும் கனிவுடன் கேட்டு கேட்டு கவனித்தார் கனிமொழி எம்.பி. மேலும், யாரும் சாப்பாட்டை வேஸ்ட் செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கிய கனிமொழி காய்கறிகளை ஒதுக்கி வைக்காமல் சாப்பிடுமாறு குழந்தைகளிடம் எடுத்துக் கூறினார்.

அமர்ந்து சாப்பிட்டார்
இதனிடையே மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து தானும் காலை சிற்றூண்டி சாப்பிட்ட கனிமொழி எம்.பி. கிச்சடியின் சுவையை ருசித்து பார்த்தார். மேலும், அங்கிருந்த அதிகாரிகளிடம் காலை சிற்றூண்டி தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய கனிமொழி அதற்குரிய கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications