வடமாநில தொழிலாளர் பற்றி வதந்தி.. வசமாய் சிக்கிய பாஜகவின் பிரசாந்த் உம்ரா! போலீஸ் முன்பு வாக்குமூலம்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் பிரசாந்த் உம்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கட்டடம், பாலம் கட்டும் பணி, ஓட்டல் வேலை, பண்ணை வேலைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டது. இதுதொடர்பாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை சில விஷமிகள் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதனை தமிழக அரசு முற்றிலுமாக மறுத்தது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதோடு பீகாரில் இருந்து அதிகாரிகள் குழு தமிழகம் வந்து பீகார் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சென்றனர். அப்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். அதன்படி பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் தான் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரா மீதும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரசாந்த் உம்ரா உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். மேலும் போலீஸ் விசாரணைக்கு முறைப்படி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்தில் பிரசாந்த் உம்ரா விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி வசந்தராஜ், காவல் ஆய்வாளர் அய்யப்பன் உள்ளிட்டவர்கள் விசாரணை நடத்தினர்.
போலீஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பிரசாந்த் உம்ரா பதிலளித்தார். அவரது வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி பிரசாந்த் உம்ரா கூறுகையில், ‛‛நீதிமன்ற உத்தரவின்படி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜரானேன். விசாரணை நல்ல முறையில் நடக்கிறது. போலீசார் எந்த தொந்தரவும் அளிக்கவில்லை'' என்றார்.
****












Click it and Unblock the Notifications