“திராணி இருந்தா நில்லு.. அரசியலை விட்டே போறேன்” அண்ணாமலைக்கு பகிரங்க சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும், அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என சவால் விட்டுள்ளார் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். இதையொட்டி, அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தலைக் குறிவைத்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் திமுகவின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “நான் அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். தைரியம், திராணி இருந்தால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா? அண்ணாமலை இங்கு போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. அப்படி அண்ணாமலை நின்று டெபாசிட் வாங்கிவிட்டால் நாங்கள் அரசியலை விட்டே போய்விடுகிறோம்.
எனது சவாலை அண்ணாமலை ஏற்று இங்கு நிற்பாரா? நிற்பதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? இங்கு அண்ணாமலை நின்றால், டெபாசிட் என்ன, தமிழ்நாட்டை விட்டே துரத்தும் வேலையை திமுகவினர் சொல்வார்கள். இந்த இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என பாஜகவினர் கனவு காண்கிறார்கள்.
சில அமைச்சர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. என் மீதும் தான் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. என்ன செய்து விடுவீர்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், “தைரியமாக நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் சந்திப்போம். எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளரையும், பாஜக வேட்பாளரையும் டெபாசிட் போகும் நிலையை உருவாக்குவோம். களத்தை நமதாக்குவோம். எந்த நிலையிலும், மக்களுக்கு தோள் கொடுப்பவர்களாக திமுகவினர் இருப்போம்” எனப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, “இந்துக்களுக்கு எதிரான கட்சியே பாஜக தான். ஏழை எளிய மக்களை படிக்க விடாமல் செய்கிறது பாஜக. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications