உறவினர் என்றும் பாராமல் நேர்முக உதவியாளரை நீக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்.. என்ன காரணம்
தூத்துக்குடி: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் என்பவர் நீக்கப்படுவதாக நவம்பர் 12 ஆம் தேதி பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் பணிபுரிந்த சுப்பையா, மீன்வளத்துறையில் பணிபுரிந்த காத்தவராயன் ஆகியோரும் அமைச்சரின் உதவியாளர்களாக முன்பு பணியாற்றினார்கள். அவர்களும் அப்பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 3 உதவியாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் விஜய்யின் நண்பரான நடிகர் ஸ்ரீநாத் போட்டியிட்டார். அங்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில்த மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை மைச்சராக இருக்கிறார். பொதுவாக அமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

அப்படித்தான் நேர்முக உதவியாளர்கள் நியமனத்தின்போது ஸ்ரீநாத்தின் உறவினர் என்று கூறப்படும் ஸ்ரீதருக்கு இளநிலை நேர்முக உதவியாளர் பொறுப்பு கிடைத்தது. ஆனால் அதற்குரிய பொறுப்புணர்வுடன் ஸ்ரீதர் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் ஸ்ரீநாத்திற்கு புகார்களாக சென்றதாம். இதனால் அமைச்சர் ஸ்ரீநாத் நேரடி விசாரணை செய்தாராம். அதன்பிறகே அதிரடியாக நடவடிக்கை எடுத்தாக மீன்வளத்துறையில் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் வட்டாரங்களில் கூறுகையில். "மீன்வளத்துறைக்கு அமைச்சராக ஸ்ரீநாத் பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் பணிபுரிந்த சுப்பையா, மீன்வளத்துறையில் பணிபுரிந்த காத்தவராயன் ஆகியோர் உதவியாளர்களாக நியனம் செய்யப்பட்டார்கள். அமைச்சரின் உறவினரான ஸ்ரீரும் இளநிலை நேர்முக உதவியாளராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்" என்று கூறினார்கள்.
ஆனால் உதவியாளர் ஸ்ரீதர் அமைச்சரின் கவனத்துக்கு முக்கிய தகவல்கள் செல்லாமல் பார்த்துக் கொண்டார் என்று மீன்வளத்துறை வட்டாரங்களில் இருந்து புகார்கள் அமைச்சரின் கவனத்திற்கு போனதாம்.. மீன்வளத்துறை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் அண்மை காலத்தில் அதிகமாக எழுந்தன. இதையும் அதிகாரிகள் ஸ்ரீநாத் வசம் கொண்டு செனறார்களாம். இதையடுத்து கடந்த மாதம் காத்தவராயன், சுப்பையா ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த சூழலில் உறவினர் என்று கூறப்படும் ஸ்ரீதரையும் தனக்கு வேண்டாம் என்று பொதுத்துறை செயலருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து , நவம்பர் 12 ஆம் தேதி பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி வெளியிட்ட உத்தரவில், 'அமைச்சர் ஸ்ரீநாத்தின் வேண்டுகோளுக்கிணங்க இளநிலை நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த க.ஸ்ரீதர் பணியில் இருந்து நீக்கப்படுவதாக (Termination of Service)" கூறியிருந்தார். விரைவில் அமைச்சர்களிடம் உதவியாளர்களாக பணிபுரிகிறவர்களின் ஆட்டங்களுக்கு கடிவாளம் போடும்விதமாக அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயலாம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.




Click it and Unblock the Notifications
