தூத்துக்குடி மருத்துவ மாணவி தற்கொலை! பேராசிரியர் பரமசிவம் அதிரடி கைது.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மயக்கவியல் துறை முதுகலை மாணவி தற்கொலை சம்பவத்தில் பேராசிரியர் பரமசிவம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.டி.சி நகரைச் சேர்ந்தவர் சுகிர்தா. 27 வயதான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலைப் பட்டம் படித்து வந்தார்.

கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த இந்த மாணவி, கடந்த 6ஆம் தேதி கல்லூரிக்குச் செல்லாமல் விடுதியிலேயே தங்கியதாகக் கூறப்படுகிறது. கல்லூரி முடிந்து சக மாணவிகள் விடுதிக்குச் சென்ற நிலையில், சுகிர்தாவின் அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
தற்கொலை: நீண்ட நேரமாக அறை பூட்டப்பட்டே இருந்த நிலையில், மாணவிகள் கதவைத் தட்டியுள்ளனர். இருப்பினும், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மாணவிகள் இது தொடர்பாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கே சுகிர்தா உயிரிழந்து கிடந்த நிலையில், இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுகிர்தா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம்: மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்ட அறையைச் சோதனை செய்த நிலையில், அங்கிருந்த ஊசியும் மருந்து பாட்டிலையும் கண்டுபிடித்தனர். அது தசைகளை தளர்வுடைய செய்யும் மருந்து என்பது தெரிய வந்தது. அங்கு மாணவி எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
அதில் மயக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் பரமசிவன் தன்னை உடலளவிலும் மனதளவிலும் பாலியல் தொல்லை கொடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், டாக்டர் ஹரீஷ், டாக்டர் ப்ரீத்தி ஆகியோரும் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது: மேலும், இது தொடர்பாக சுகிர்தாவின் தந்தையும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டியதாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்கொலை சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இதில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட மயக்கவியல் துறைத் தலைவர் டாக்டர் பரமசிவன், ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் பரமசிவத்தை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications