பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனம் இன்று மாலை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் மரணம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மரண வழக்கு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

அடுத்தடுத்து கைது
சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்த நிலையில் நேற்று முதல் நாள் எஸ்ஐ ராகுகணேஷ் இதில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதிகாலையில் இருந்து அடுத்தடுத்து மூன்று போலீசார் இதில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு
ஏற்கனவே சிபிசிஐடி மூலம் இந்த வழக்கில் எப்ஐஆர் மாற்றப்பட்டது. கஸ்டடி மரணம் என்பதை சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்படி கைது
இவரின் வாகனம் இன்று மாலை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டடுள்ளது. இன்று மாலை விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதி ஒன்றில் இவரின் பைக் இருந்தது. இந்த பைக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் அருகே பூசனூரில் வைத்து முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications