கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா.. நெஞ்சுவலியால் ஜிஎச்சில் அனுமதி! பாதியில் படக்கென நின்ற லிஃப்ட்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை லிப்டில் 7 பேர் சிக்கி தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நோயாளியை ஐசியூ வார்டுக்கு அழைத்துச் சென்ற போது பாதியில் லிப்ட் நின்ற நிலையில், அதில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டியன். இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள ICU வார்டில் அனுமதிப்பதற்காக, மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் லிப்ட் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றுள்ளது.
இதனால் நோயாளி ராமர் பாண்டியன், அவரது மகன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 4 பேரும், மருத்துவமனை பணியாளர்கள் 3 பேரும் என மொத்தம் 7 பேர் லிப்டிற்குள் சிக்கிக் கொண்டனர். லிப்ட் திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், லிப்டை பாதுகாப்பாக கையாளும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் லிப்டின் கதவை திறந்து, அதற்குள் சிக்கியிருந்த 7 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நோயாளி ராமர் பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக ஏற்கனவே சிகிச்சையில் இருந்த நிலையில், அவரை ICU-வில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்ற்றுள்ளது.
இதனிடையே, நோயாளி ராமர் பாண்டியனின் மகன் அர்ஜுனன், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சுமார் ஒரு மணி நேரமாக லிப்டிற்குள் காத்துக் கொண்டிருந்தோம். உடனடியாக மீட்பு நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை. எனது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் உள்ளார்.
அவரை ICU-வில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றபோது இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
