வேல்முருகன் பாட பாட வியந்து பார்த்த திருச்செந்தூர் பக்தர்கள்.. மீண்டும் விஜய் அரசை பாராட்டிய பாடகர்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பாடகர் வேல்முருகன், மீண்டும் இன்று கோயிலுக்கு வந்தார். அங்கு "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே" என்று முருகனை போற்றிப் பாடி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு சஷ்டி விழாவுக்குச் செய்துள்ள ஏற்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார்.
பாடகர் வேல்முருகன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த மாதமும் அவர் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி குறித்துக் கூறிய கருத்துகள் கவனம் பெற்றன.

திருச்செந்தூரில் வேல்முருகன்
குறிப்பாக, அறநிலையத்துறை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து துறைகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டியிருந்தார். மேலும், இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டதையும் அப்போது வரவேற்று பேசியிருந்தார்.
நாட்டுப்புறக் கலைஞர்களில் இருந்து ஒருவர் இந்த பொறுப்புக்கு வந்திருப்பது கிராமியக் கலைக்கு மகுடம் சூட்டியது போன்றது என்று மகிழ்ச்சி என்றும், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கிராமியக் கலைஞர்களுக்கும், நாட்டுப்புறக் கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் வேல்முருகன் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் விஜய்க்கு பாராட்டு
அதுமட்டுமல்ல, சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவதாக எழுந்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் நியாயமாக முடிவு செய்கிறார்.. ஒரு ரூபாய்கூட இல்லாமல் வேலைகளும், பதவிகளும் இப்போது கிடைக்கின்றன" என்று புகழ்ந்து பேசியிருநதார்.
இந்த நிலையில், மீண்டும் இன்று திருச்செந்தூர் வந்த வேல்முருகன், சஷ்டி விழாவில் பக்தர்களுடன் இணைந்து முருகனை தரிசித்தார்.. "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே" என்று பாடி அங்கிருந்தவர்களை மலைக்க செய்தார்..
சூரசம்ஹாரம்
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "சஷ்டி விழாவில் மக்களுடன் முருகனை தரிசித்தேன். தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்ததில் சந்தோஷம். எல்லோரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.. சூரசம்ஹார இசை நிகழ்ச்சியில் நானும் பல பாடகர்களுடன் இணைந்து பங்கேற்க போகிறேன்.. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்துளளது.. மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்" என்று பாராட்டினார்.
கடந்த மாதம் திருச்செந்தூரில் முதல்வர் விஜய் ஆட்சியைப் பாராட்டிப் பேசிய வேல்முருகன், இந்த முறையும் தமிழக அரசின் சஷ்டி விழா ஏற்பாடுகளைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
